தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, தமிழ்த்துறை, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் இணைந்து, “தமிழ் இலக்கியங்களில் போர்: பெருமிதங்களும் பேரவலங்களும்” எனும் பொருண்மையிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் 11-12-2025 அன்று கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு வரப்பெற்ற கட்டுரைகளில் தேர்வு செய்யப்பெற்ற 103 கட்டுரைகளைக் கொண்டு ஆய்வுக்கோவை தயாரிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கிற்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹெச். முகமது மீரான் தலைமை வகித்தார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் வரவேற்றார். கல்லூரி மேலாண்மைக்குழுத் தலைவர் எஸ். முகமது மீரான் முன்னிலை வகித்தார். கருத்தரங்க ஆய்வுக்கோவையினைக் கல்லூரியின் தாளாளர் எம். தர்வேஷ் முகைதீன் வெளியிட, போடிநாயக்கனூர், ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் செயலாளர் ஆர். புருசோத்தமன் பெற்றுக் கொண்டார்.
புதுச்சேரி, பெருந்தலைவர் காமராசர் கல்லூரியின் இணைப்பேராசிரியர் முனைவர் திருமா. அன்புச்செல்வன் ஆய்வுரை வழங்கினார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மொழி மற்றும் மொழியியற் புலத்தின் உதவிபேராசிரியர் முனைவர் நா. சுலோசனா, முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் ஆசிரியர் தேனி மு. சுப்பிரமணி, தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எஸ். எஸ். பொன்முடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நியூசிலாந்து, கல்வித்துறை முனைவர் சொ. இலக்குவன் ஆய்வரங்கத் தொடக்கவுரையினை இணைய வழியில் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மதுரைக் கல்லூரி, தமிழ்த்துறை, இணைப்பேராசிரியர் முனைவர் ந. இரத்தினக்குமார், உடுமலைப்பேட்டை, அரசுக் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ந. வேலுமணி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, தமிழ்த்துறை, இணைப்பேராசிரிய முனைவர் ஆ. பூமிச்செல்வம் ஆகியோர் தலைமையில் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன. பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழார்வலர்கள் ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரைகளை வாசித்தனர்.
நிகழ்வு முடிவில் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் மு. அப்துல்காதர் நன்றி தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கோவையினைப் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பிற்குச் சென்று, 2025 - கட்டுரைத் தொகுப்புகள் எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்றிருக்கும், ‘தமிழ் இலக்கியங்களில் போர்: பெருமிதங்களும் பேரவலங்களும்’ எனும் பெயரிலோ அல்லது அதன் மேலிருக்கும் ஆய்வுக்கோவையின் அட்டைப்படத்திலோ சொடுக்கி, அங்கிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.