"ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார் – யோபு 23:10"
இந்தப் புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்று நீங்கள் எண்ணிப் பார்க்கலாம். ஒரு வேளை நாம் கடந்த ஆண்டு சந்தித்த துன்பங்கள், பாடுகள், துயரங்கள், கண்ணீர்கள் இந்த ஆண்டும் தொடருமோ என்ற ஐயம் கூட நமக்கு இருக்கலாம். இந்தப் புதிய ஆண்டிலாவது தேவன் நான் எதிர்பார்த்திருக்கும் நன்மையை அருள மாட்டாரா என்று உங்களில் ஒரு சிலருடைய மனம் ஏங்கித் தவிக்கலாம். இவை எல்லாவற்றிற்கும் யோபு பக்தன் தன் பாடுகளின் மத்தியில் கூறிய ஒரு வாக்கு நமக்கெல்லாம் ஆறுதலைத் தருவதாயிருக்கிறது.
" நான் போகும் பாதையைத் தேவன் அறிவார். "
ஆம். இந்த ஆண்டில் நாம் செல்லும் பாதையை தேவன் முன்னறிந்து வைத்திருக்கிறார். பவுல் அப்போஸ்தலன் எபிரேயர் 12-1ல் கூறியுள்ளபடி, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் நாம் பொறுமையோடே ஓடக் கடவோம். வருடத்தை அவருடைய நன்மையால் முடிசூட்டுகிறார். அவருடைய பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. ஆகையால் தேவன் நமக்கு நியமித்திருக்கிற அவருடைய பாதையில் ஜெபத்துடனும் விசுவாசத்துடனும் கடந்து செல்வோம்.
இயேசு கிறித்து 5 அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து ஐந்தாயிரம் பேரை போஷித்து அவர்களை அனுப்பிவிட்ட பின் சீடர்களைப் படகில் ஏறி தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி துரிதப்படுத்தினார். சீடர்களும் படகில் ஏறி நடுக்கடலிலே சேர்ந்த போது காற்று அவர்களுக்கு எதிராக இருந்தது. அவர்கள் வருத்தத்தோடு தண்டு வலித்ததை இயேசு கண்டார். அவர் அவர்களைக் கைவிடவில்லை. அவர்களை அக்கரைக்குச் செல்ல இயேசு துரிதப்படுத்தும் போதே அவர்கள் செல்லும் பாதையை அறிந்திருந்தார். அவர் நாலாம் ஜாமத்தில் கடலின் மேல் நடந்து அவர்களிடத்தில் வந்தார். அவர் படகில் ஏறி அமர்ந்தவுடன் காற்று அமர்ந்தது.
இதை வாசிக்கும் அன்பானவர்களே! இந்த ஆண்டில் நீங்கள் எந்த பாதையில் செல்லும்படி தேவன் உங்களைத் துரிதப்படுத்துகிறாரோ, அந்தப்பாதையில் செல்லத் தயங்க வேண்டாம். ஒருவேளை அதில் போராட்டங்கள், துன்பங்கள், புயல்கள் இருந்தாலும் அவர் அவற்றின் நடுவில் நடந்து வந்து உங்கள் வருத்தத்தையும் பயத்தையும் போக்குவார் என்பதில் சந்தேகமேயில்லை. கொந்தளிக்கும் கடலை அமைதிப்படுத்துவார். சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்குவார். (ஏசா. 43.16)