பகவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஜாம்பவதி மூலமாகத் தோன்றியவன் சாம்பன். அவன் இயற்கையிலேயே பிரகாசமான, கட்டுக்குலையாத உடற்கட்டைப் பெற்றிருந்தான். தன் மேனி வனப்பை எண்ணி இறுமாந்திருந்தான்.
ஒருமுறை துவாரகைக்கு வருகை தந்த துர்வாச முனிவரின் மெலிந்த தேகத்தையும் எலும்புக்கூடாய் இருந்த தோற்றத்தையும் கண்டு எள்ளி நகையாடினான். விளைவு?
குஷ்டரோகம் அவனைப் பீடிக்கும் என்று முனிவர் சாபம் கொடுத்தார்.
அதனால், அவன் தன் கட்டுமஸ்தான உருவை இழந்து குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு விகார ரூபம் அடைந்தான். எந்தச் சிகிச்சையும் அவனது நோயைத் தீர்க்கவில்லை.
மிக்க வேதனையுடன் தன் தந்தையான கிருஷ்ணரிடம் சென்று தான் தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்குமாறு கோரினான்.
மகனது துயரத்தைக் கண்ட கண்ணன் அவனைத் தேற்றினார்:
‘‘பயமும், நம்பிக்கையின்மையும் நோயின் வேகத்தைத் தீவிரப்படுத்துமே தவிர தீர்க்காது; பொறுமையாய் இரு. சூரிய பகவானை மனமுருகி வேண்டு. உனக்கு ஆரோக்கியத்தையும் உடலின் பழைய தோற்றத்தையும் தர வல்லவன் அவன் ஒருவனே! சரியான தேவதையை நம் துன்பத்திற்கு ஏற்ப முறையாகப் பிரார்த்தித்தால் முழுப் பலன் பெறலாம். அந்த தெய்வம் சூரிய பகவான் ஒருவனே’’ என்றார்.
ஆனால் சாம்பன் மனமோ நிலை கொள்ளவில்லை. மீண்டும் நம்பிக்கையற்றே காணப்பட்டான்.
அப்போது கண்ணன், ‘‘இந்த பூமி சூரியனிடம் இருந்தே தோன்றியது. கிரகங்கள், நட்சத்திரங்கள், யோகம், கரணம், ராசி என அனைத்தும் இப்பூமியில் சூரியனிடமிருந்தே பெறப்பட்டன. எவராலும் தொகுத்துத் தரமுடியாத சிறப்புத் தன்மைகளைப் பெற்றவன் சூரியன். உன் பிணிக்கு மருந்தும், பிரச்னைக்குத் தீர்வும் தரக்கூடிய தேவன் சூரியனைத் தவிர யாருமில்லை. எனவே ஆதவனை வழிபட்டு ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்’’ என்றார்.
சாம்பனும் அதனை ஏற்று சூரியனின் ஸஹஸ்ர நாமங்களை உச்சரித்துத் தவமியற்றினான்.
அவனது கடுந்தவத்தைக் கண்டு மகிழ்ந்த கதிரவன் கனவிலேக் காட்சி தந்து, ‘‘சாம்பனே, நீ என்னை வேண்டிக் கொள்ள ஆயிரம் நாமங்களை உச்சரிக்கத் தேவையில்லை. நான் இப்போது உனக்குத் தரும் 21 நாமங்களைக் கூறி வழிபட்டாலேப் போதுமானது. மிக்க சக்தி வாய்ந்த மந்திரங்கள் அவை. இந்த மந்திர நாமங்கள் பிற அனைத்தையும் விட சிறந்தப் பலனைத் தரும். யாரொருவர் என்னைத் துதிக்க இவற்றை உணமையுடன் உச்சரித்து வழிபடுகிறாரோ, அவர் பிணி நீங்கி, நல்ல உடல் நலம் அடைந்து சிறந்த புத்திரர்களையும் பெறுவர்’’ என்று கூறி மறைந்தார்.
சாம்பனும் அவ்வாறேச் செய்ய, சூரியன் அவன் இழந்த ஆரோக்கியத்தையும் பழைய உடலையும் அருளினார்.
சாம்பன், ‘‘சூரிய பகவானே, என்றும் எனக்கு உன் அருள் வேண்டும்!’’ என்று வேண்டினான்.
சூரியதேவனும் தினமும் அவன் கனவில் தோன்றுவதாய் உறுதியளித்தார். தனக்காக சாம்பா ஆற்றங்கரையில் ஒரு கோயில் கட்டும்படிக் கட்டளை இட, சாம்பனும் அவ்விடத்தில் சூரியனுக்குக் கோயில் கட்டித் தினமும் வழிபட்டு வந்தான்.
ஆரோக்கியம் சிறக்க, ஆயுள் பெருக, செல்வம் அதிகரிக்க அந்தச் சூரியனே அளித்த இருபத்தோரு நாம மந்திரம்தான் இது:
“ஓம் விகர்த்தனோ விவஸ்வாம் ச
மார்த்தண்டோ பாஸ்கரோ ரவி: |
லோகப்ரகாசக: ஸ்ரீமான்
லோக சக்ஷுர் க்ரஹேஸ்வர: ||
லோக ஸாக்ஷி த்ரிலோகேச:
கர்த்தா ஹர்த்தா கமிஸ்ர: |
தபனஸ் தாபனஸ் சைவ
சுசி ஸப்தாச்வ வாஹன:
கபஸ்தி ஹஸ்தோ ப்ரஹ்மா ச
ஸர்வதேவ நமஸ்க்ருத: ||
(சூரிய புராணம்)