வேதம் கூறும் பல கர்மாக்களில் அக்னி ஹோத்ரம் மிகவும் சிறந்தது. ‘அக்னிஹோத்ர பலாதேவா’ என வேதங்கள் அக்னி ஹோத்ரம் செய்வதையே முக்கியமாகக் கருதுகின்றன.
அங்கிரஸ் என்ற ரிஷி ‘ஸத்ரயாகம்’ செய்யத் தொடங்கினார். யாகத்தில் ‘ப்ரவர்க்யம்’ என்ற ஒரு பகுதி.
அதற்குத் தேவையான பாலைக் கறக்கக் கன்றைப் பசுவிடம் சேர்த்தார் அங்கிரஸ்.
கன்று வாய் வைத்த பின்னரே பசுவின் பால் நன்கு சுரக்கும். எனவே மகரிஷி, ‘‘கன்றே, பசுவின் பாலை ஹோமத்திற்காக வழங்கு’’ என்று வேண்டினார்.
அப்போது கன்று ரிஷியிடம், ‘‘நான் பிறந்த பத்து நாட்கள் பசுவின் பாலைக் கறக்கக் கூடாது, சூரியன் உதித்து எட்டே முக்கால் நாழிகை வரை நான் என் தாயுடன் இருக்க வேண்டும்’’ என்று வரம் கேட்டது.
அதன்படி வரம் அளிக்கப்பட்டது.
வேதத்தில் கன்றுகளுக்கு, தாய்ப் பசுவிடம் பால் குடிக்கும் உரிமைக்கு உத்தரவாதமே வழங்கப்பட்டுள்ளது.
கன்றுகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவாத மந்திரம் இருக்கிறது. அது;
‘தஸ்மாத் வத்ஸம் ஜாதம் தசராத்ரீ’
கன்று பிறந்த பத்து தினங்கள் பால் கறப்பதில்லை.
‘ந துஹந்தி ஆஸங்கம் மாத்ரா ஸஹசரதி’
சூரியன் உதித்து எட்டே முக்கால்நாழிகை வரை கன்று தாயுடனே இருக்கும்.
ஹோமத்திற்குப் பால் அவசியம். அதே சமயம் கன்று, தன் தாயிடம் பாலைக் குடித்து உயிர் வாழ்வதும் அவசியம். இதை உணர்ந்து, கன்றுக்கு வேதம் வழங்கிய உத்தரவாதம்தான் மேற்படி மந்திரம்.
இன்றும் இந்து சமய நடைமுறையில் நம் நாட்டில் இருந்து வருகிறது.