தமிழ்நாட்டில் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆச்சாரியார் இராமானுஜரின் சமத்துவக் கொள்கையைப் போற்றும்படியாகவும், அவரது ஆயிரமாண்டு பிறந்தநாள் நினைவாகவும் 216 அடி உயரமுள்ள சிலை 2019 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஐதராபாத் நகரத்தில் சின்ன ஜீயரால் நிறுவப்பட்டது. 216 அடி உயரம் கொண்ட இராமானுஜர் சிலை, விரிந்த தாமரை வடிவ 54 அடி உயர பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. தியான நிலையில் அமர்ந்திருக்கும் பஞ்சலோக இராமானுஜர் சிலை 120 கிலோ கிராம் தங்கத்தால் மேற்பூச்சு பூசப்பட்டுள்ளது. இது இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்ததை நினைவு கூர்கிறது.
34 ஏக்கர் பரப்பில் அமைந்த இராமானுஜர் கோயிலின் தரைத் தளத்தில், 63,444 சதுர அடிப்பரப்பில் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றையும், தத்துவங்களை விளக்கும் சிற்பங்களும், சித்திரங்களும் இடம் பெற்றிருக்கின்றன. 30,000 சதுர அடி கொண்ட இரண்டாம் தளத்தில், இராமானுஜரின் 120 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மூன்றாம் தளத்தில் 14,700 சது அடியில் வேத சாத்திரங்களின் மின் நூலகம் மற்றும் ஆய்வு மையம் உள்ளது.
பஞ்சலோக இராமானுஜர் சிலை எனும் சமத்துவ சிலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று திறந்து வைத்தார்.