துளசியை துழாய், துளவம், வனம், குல்லை எனும் நான்கு பெயர்களிலும் அழைப்பதுண்டு. துழாய் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைய பெயர். அப்போதும், இப்போதும் துளசியைக் குறிக்க இந்தச் சொல் மிகவும் பயன்படுகிறது. துழாயைத் தண்ணந்துழாய், தண்துழாய், திருத்துழாய், நறுந்துழாய், வியன்துழாய், தெய்வத்துழாய் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுகிறார்கள். மிகப் பழங்காலத்தில் துழாய் விஷ்ணுவுக்கு உரியதாகவே விதிக்கப்பட்டது. பழைய பாடல்களில் துழாயோன், துழாய் மாலையான் என்ற பெயர்கள் விஷ்ணுவைக் குறித்தன. துளசியும், கொன்றையும் கலந்து தொடுத்த மாலை விஷ்ணுவுக்குச் சூட்டப்பட்டது. துளவம், வனம், குல்லை என்ற பெயர்கள் முன்னர் வழக்கில் இருந்தன. இப்போது இல்லை.
துழாய், துளவம் என்ற பெயர்கள் சங்கப் பாடல்களிலும், நாலாயிரத் திவ்ய பிரபந்தத்திலும் காணப்படுகின்றன. துளசி என்பது வடசொல்லின் தமிழ் வடிவமாம இருப்பினும், இது சங்கப்பாடலில் இல்லை; நாலாயிரத்திவ்ய பிரபந்தத்திலும் இடம் பெறவில்லை. காலப்போக்கில் இந்தப் பெயர் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் இடம் பெற்று நிலை பெற்றது. இதனால் துழாய் முதலிய சொற்கள் செல்வாக்கிழந்தன. இவை பேச்சு வழக்கில் இல்லை.
துள = ஒப்பு, சி = இல்லாதது. துளசி = ஒப்பில்லாதது என்று பொருள் கொள்ளலாம். ஒப்பற்ற அழகையும், மருந்துவப் பயன்களையும் கொண்டது துளசி.
வடமொழியில் துளசியைக் குறிக்கும் பின்வரும் பெயர்கள் அதன் குணங்களையும் சுட்டுகின்றன:
1. விஷ்ணு வல்லபா – விஷ்ணுவுக்கு மிகப் பிரியமானது.
2. கிருஷ்ண ஜீவிதா – கிருஷ்ணன் வாழ்வது.
3. பகுபத்திரி – பல இலைகளைக் கொண்டது.
4. பகுமஞ்சரி – பல மலர்க்கொத்துகளைக் கொண்டது.
5. சுரஸா – நல்ல சாற்றைக் கொண்டது.
6. சூலாக்னி – சூல நோயைச் சுட்டெரிப்பது.
7. அபேதராக்ஷஸி – நோய்க் கிருமிகளால் தோன்றும் துன்பங்களை நீக்குவது.
8. பாவனி – புனிதத் தன்மையை உருவாக்குவது.
9. சுலபா – எளிதில் கிடைப்பது.
10. கிராம்யா – கிராமங்களில் கிடைப்பது.
இவை தவிர, 11. பிருந்தா, 12. பிருந்தாவதி, 13. விஸ்வபூஜிதா, 14. புஷ்பசாரா, 15. விஸ்வபாவனி, 16. நந்தினி என்று வேறு சில பெயர்களும் துளசிக்குரியன.
மேற்கண்ட பெயர்களில் எவையேனும் எட்டுப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து நாம் துளசியை அர்ச்சிக்கலாம்.