பாணலிங்கம் என்பது கங்கை, யமுனை, நர்மதை முதலிய நதிகளில் கிடைக்கும் ஒரு வகை உயர்ரக கூழாங்கற்களாகும். இவை பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட பல்வேறு தேவர்களால் பூஜிக்கப் பெற்று இந்நதிகளில் விடப்பட்டவை என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு விடப்பட்ட இந்த சிவலிங்கங்களில் அவற்றைப் பூஜித்த தேவர்களின் ஆயுதத்தை போன்ற இயற்கை ரேகைகள் அமைந்திருக்கும். இவை வெள்ளை , சிவப்பு, பழுப்பு, பொன் நிறம், கருநிறம், நீலநிறம் போன்ற பல நிறங்களில் கிடைக்கின்றன.
பாணலிங்கங்களுக்குப் பூஜை சமயத்தில் இறைவனை மந்திரத்தால் ஆவாகனம் செய்து எழுந்தருளச் செய்ய வேண்டுமென்பதில்லை. ஏனென்றால், அவற்றில் எப்போதும் சிவபெருமான் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பது ஆன்றோர்களின் கருத்தாகும்.
மற்றொரு புராணப்படி, பாணாசுரன் என்ற சிவபக்தன் தன் ஆயிரம் கைகளாலும் நாள்தோறும் ஆயிரம் சிவலிங்கங்களை நிறுவி பூஜித்த பின், அவன் நதி நீரில் விட்ட சிவலிங்கங்களே பாணலிங்கங்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இவை பாணாசுரன் பெயரால் பாணலிங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.
பாணலிங்கங்கள் கைப்பிடியளவு முதல் யானையளவு பெரிய வடிவில் கூட கிடைக்கின்றன.
முற்காலத்தில் காசி யாத்திரை சென்று வந்தவர்கள் கொண்டு வந்த இத்தகையச் சிவலிங்கங்களே பல கோயில்களில் இப்போது காசி விசுவநாதர் என்னும் பெயரில் விளங்கி வருகின்றன.
"ஆயிரம் கல் சிவலிங்கங்களுக்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமம். பன்னிரெண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஓர் பாணலிங்கம் சமம்” என்று பாணலிங்கத்தின் பெருமையை பழைய நூல் ஒன்று குறிப்பிடுகிறது.