கோவிலுக்குச் சென்று வழிபடுபவர்கள், இறைவனைத் தரிசித்து விட்டு, பிரகாரத்தை வலம் வருவார்கள். சிலர், வெளிப்பிரகாரத்தை ஆலயத்தோடு வலம் வந்து வழிபட்டு விட்டு, கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்குவார்கள்.
இதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் வழிபடுவார்கள். இந்த வழிபாட்டையும் சேர்த்து மொத்தம் மூன்று வகையான இறை வழிபாடுகள் இருக்கின்றன.
பஞ்சாங்க நமஸ்காரம்
இந்த வகையான வழிபாட்டு முறை பெண்களுக்கு உரிதானது. இப்படி இறைவனை வணங்கும் போது, பெண்கள் தங்களுடைய பஞ்ச அங்கங்கள் (பஞ்சம்-ஐந்து, அங்கம்-உடற்பாகம்) தரையில் படும்படி விழுந்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த முறையில் தலை,இரண்டு முழங்கால்கள்,இரண்டு பாத நுனிகள் பூமியில்படும் படி விழுந்து வணங்க வேண்டும்.இப்படி வழிபாடு செய்வதால் இறைவனுடைய முழுமையான நல்லாசி கிடைக்கும்.
அஷ்டாங்க நமஸ்காரம்
இந்த வகையில் இறைவனை வணங்குவது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இந்த வழிபாட்டு முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம்-எட்டு, அங்கம்-உடற்பாகம்) தரையில் படும்படியாக விழுந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு தோள் பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாத நுனி ஆகிய எட்டு பகுதிகளும் தரையில் படும்படியாக படுத்துக் கொண்டு இறைவனின் திருப்பாதத்தை சரணடைவதாக நினைத்து வணங்க வேண்டும். இந்த வகை வழிபாட்டால், நம்முடைய வாழ்வில் உண்டான பாவங்கள் நீங்கி நமக்கு நற்கதி கிடைக்கும்.
உத்தம நமஸ்காரம்
நம்முடைய கரங்களின் ஓடும் கைரேகையில் லட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதனை வேத ரேகைகள் என்றும் அழைப்பார்கள். அந்த வேத ரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களையும் இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பின் மையத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மனதில் இறைவனின் மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும்.மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்கும்போது, அதை இறைவன் செவி சாய்த்துக் கேட்பான் என்பது ஐதீகம்.இந்த முறைக்கு ‘உத்தம நமஸ்காரம்’ என்று பெயர்.
த்ரியங்க நமஸ்காரம்
தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பி வணங்குதல்.
ஏகாங்க நமஸ்காரம்
தலையை மட்டும் குனிந்து வணங்குவது.
கோவிலுக்குள் வலம் வரும் போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்குவது கூடாது.
கொடி மரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.
இறைவனுக்குரிய சுலோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது. முற்பிறவியில் இறைவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது இறைவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அகந்தையை விட்டொழித்து, `நீயன்றி வேறு கதி இல்லை' என்ற மனோபாவத்தோடு, நம் உடலை தரையில் கிடத்தி இறைவனை வணங்குவதே நமஸ்காரத்தின் உட்பொருள்.