எந்த மனிதரும் தவறுகள் செய்யாமலில்லை. அறிந்து செய்யும் தவறுகள் ஒரு பக்கம், அறியாமல் செய்யும் தவறுகள் மறுபக்கம். நடக்கும் போது நம் காலடிபட்டு எறும்பு, பூச்சி போன்ற எத்தனை உயிர்கள் சாகின்றன? இதுவும் ஒருவகை பாவம்தானே? இதனால் எழும் தோஷத்தினால் கன்னிப் பெண்களுக்கு திருமணத்தில் தடை வரும். இதைத் தவிர்க்கவே பெண்கள் வாசலில் அரிசி மாவினால் கோலம் போடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.
மழையினால் உணவுக்கு வழியின்றி இரவு முழுவதும் அடைந்து கிடக்கும் சிறு உயிரினங்கள் அதிகாலையில் வெளிவந்து தமக்குத் தேவையான உணவாக அரிசி மாவைத் தேடி வந்து உண்ணும். அந்த உணவினை சிறு உயிரினங்களுக்கு அளித்த பெண்களுக்கு, தோஷங்கள் அகலும்.
இதே போன்று, பசு மாட்டின் சாணம் அற்புதப் பலன்களைத் தரும் ஒப்பற்ற கிருமிநாசினி என்பது உலகளவில் பல அறிவியல் வல்லுநர்களும் ஒப்புக்கொண்ட உண்மை. நம் வீட்டைச் சுற்றிப் பரவியிருக்கும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி கொண்டது சாணம். கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களினால் நோய்த் தொற்றுகள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே சாணத்தில் மகாலட்சுமி உறைவதாகவும், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்தால் நல்லது என்றும் கூறி வாசலில் சாணத்தைக் கரைத்துத் தெளிப்பதை பழக்கமாக்கினர் நம் முன்னோர்கள்.
சாணத்தின் மீது வைக்கும் பூக்களின் தேனை உறிஞ்சுவதற்காக வரும் தேனீக்களுக்கு உணவு கிடைப்பது மட்டுமின்றி, சாணத்தின் பயனால் அந்தத் தேனீயின் விஷமும் எடுக்கப்படுகிறது. இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய நல்ல விஷயங்களை அடக்கிய மார்கழி மாதக் கோலங்களால் பெண்களின் கற்பனைத் திறன் வளர்வதுடன் காசு தராமலேயே யோகாவை செய்த பலனும் கிட்டும். ஒருமுக சிந்தனை ஏற்பட்டு அறிவும் கூர்மையாகும்.