'நைவேத்தியம் செய்தால் பகவான் எங்கே சாப்பிடுகிறார்?' என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள்.
நிவேதனம் என்றால் சுவாமியைச் சாப்பிடச் செய்வது என்று பொருளல்ல. 'நிவேதயாமி' என்றால் 'அறிவிக்கிறேன்' என்று பொருள்.
“பகவானே! இந்த வேளைக்கு உன் கருணையால் இந்த உணவு எனக்குக் கிடைத்திருக்கிறது'' என்று கடவுளுக்குத் தெரிவித்துவிட்டு, அவர் நினைவோடு உண்ண வேண்டும்.
பகவான் கொடுத்ததை அவருக்குக் காட்டாமலே நாம் அனுபவித்தால் திருடர்களாவோம்.
“ஆனா வமுதே யயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமே
யானா கியவென் னைவிழுங் கிவெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே.” (அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-28)
இப்பாடலின் பொருள், “ஆனா அமுதே! கூர் வேல் அரசே! ஞானாகரனே! சொல்லக் கூடுமோ! "நான்" ஆகிய "என்னை" விழுங்கி (நான் என்னும் எனது ஆணவத்தை நீக்கி), வெறும் "தானாய்" (மேலான நிலையில்) நிலைத்து நின்றது தற்பரம் என்னும் எல்லாம் வல்ல இறைவனான நீயே!” என்பதுதான்.