இந்து சமுதாயத்தில், தனி மனித வாழ்வியல் சமுதாயத்தோடு இணைகிறது. இது இறைவனை அடைதல் என்ற லட்சியத்தைக் கொண்டது. மனிதனின் உயர் குறிக்கோளாகிய இறையனுபூதியைப் பெறுதலே இதன் பிரதானம்.
இந்து மதத்தில் வாழ்வியல் என்பது சம்சாரம் என்று அழைக்கப்படுகிறது. சம் – தீவிரமாக (பலமுறை), சார (கடந்து செல்லல்). அதாவது, நிறைவை நோக்கிப் பலமுறை கடந்து செல்லல்.
ஒவ்வொரு செயலும் நல்வினை, தீவினை என்ற முறையில் ஏதாவது ஒரு பலனை ஏற்படுத்தியே தீரும். இதனால் இன்ப – துன்ப அனுபவங்களை உயிர்கள் பெறுகின்றன.
இப்பிறப்பில் எதிர்பாராமல் கிடைக்கும் துன்பங்கள், செல்வங்கள், இன்பங்கள், அதிர்ஷ்டங்கள் போன்றவை யாவும் சென்ற பிறவியின் வினைப்பயன்கள் அல்லது எச்சங்களே.
புண்ணியம் செய்வதால் இந்தப் பிறவியிலோ அல்லது மறுபிறவியிலோ இன்பம் கிடைக்கும். பாவம் செய்வதால் அதற்குரிய தண்டனைகளும், துன்பங்களும் சேரும் என்ற நம்பிக்கையின் காரணமாக மறுபிறவிக் கொள்கை என்னும் கோட்பாடு இங்கு மாற்ற முடியாத இடத்தைக் கொண்டுள்ளது.
இந்த உடல், உடலுக்குள் உறையும் ஆத்மா, மறுபிறவி, அதற்குக் காரணம், பாவ புண்ணியம், கர்மபலன் (செயலின் விளைவு), பிறவிக்கு முடிவு, முக்தி நெறி போன்ற கருத்துகளை சனாதன தர்மம் உரைக்கிறது.
மனித உடல் பல்வேறு கூறுகளை உடையது. அதை நாம் பார்க்கக்கூடிய இந்த உடல் ஸ்தூல சரீரம் என்றும்; பார்வைக்கு அப்பாற்பட்டதை சூட்சும சரீரம் என்றும் இரண்டாக வகுத்தனர். இவை இரண்டும் சேர்ந்து ஐந்து கோசங்களால் (உடல் போர்வைகள்) உடல் ஆனது என்பர். அவை:
1. அன்னமய கோசம் (உணவால் ஆக்கப்பட்டது) ஸ்தூல சரீரம் என்று சொல்லப்பட்டது. 2. பிராணமய கோசம் (பிராண வாயுவால்) ஆனது. 3. மனோ மய கோசம் (எண்ணங்களால் ஆனது), 4. விஞ்ஞானமய கோசம் (அறிவு சக்தியால் ஆனது), 5. ஆனந்தமய கோசம். இறை அல்லது ஆத்ம அனுபூதி இந்த ஆனந்தமய கோசத்தை அறிவதால் ஏற்படுகிறது.
உடல் நலத்தைப் பேணுவதற்கு, தண்ணீரும் உணவும் தேவை. அதற்கு நோய் ஏற்படும் போது மருந்துகள் மூலம் குணம் செய்கின்றோம். அதுபோல ஒவ்வொரு கோசத்திலும் ஏற்படும் குறைகளையும் நோய்களையும் கண்டறிவது, சரி செய்வது போன்றவை விரிவாக உணரப்பட வேண்டியவைகளாகும்.
சூட்சும சரீரம் என்பது 19 பொருள்களால் ஆனது.
1. மனம் 2. புத்தி 3. சித்தம், 4. அகங்காரம், 5.கர்மேந்திரியங்கள் ஐந்து (கை, கால், வாய், குதம், பிறப்புறுப்பு) 6. ஞானேந்திரியங்கள் ஐந்து (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்), 7. பிராணன்கள் ஐந்து (பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன்).
இவையனைத்தும் கொண்ட ஒரு ஜீவன் உலகத்தோடு ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்? ஏனெனில் உலகமானது கர்மபூமி எனப்படுகின்றது.
ஒரு ஜீவன் தனது நல்ல மற்றும் தீயசெயல்களின் விளைவாக பிறவிகளை எடுத்து, மீண்டும் தனது செயல்களின் விளைவை அனுபவித்து, புதிய படிப்பினைகள் மூலம் முன்னேற வேண்டும்.
இந்தப் பிறப்பு – இறப்பு, இன்ப – துன்பங்கள் முடிவுக்கு வர உயிர்கள் யாவும் ஞானத்தின் மூலம் முக்தி என்னும் விடுதலைப் பேற்றை அடைய வேண்டும்.