வால்மீகி முனிவர் 24,000 சுலோகங்களைக் கொண்ட ஸ்ரீமத் ராமாயண காவியத்தை இயற்றிய பின்னும் மேலும் மனச்சாந்தி கிடைப்பதற்காகவும், ராமாயணத்தில் சில முக்கிய பகுதிகளைக் கூறவில்லை என்ற உணர்வாலும் 109 சர்க்கங்களும் 12,252 சுலோகங்களும் கொண்ட ஆனந்த ராமாயணத்தை இயற்றினார். வால்மீகி ராமாயணத்தில் கூறப்படாத பல சிறப்பான அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
ஆனந்த ராமாயணத்தில், விலாச காண்டத்தில், மூன்றாவது சர்க்கத்தில் ஸ்ரீராமர், சீதாதேவிக்கு உரைத்த சம்ஞான பேடிகா என்னும் தேக ராமாயணம் கலியுகத்தில் மிகப் பயனுள்ளதாக விளங்கும் என ஸ்ரீராமரே கூறினார்.
இது சகல வேதாந்த சாரமும் அடங்கியது. பக்தி முக்திகளைக் கொடுக்கக்கூடியது.
ஒரு நாள் சீதை ஸ்ரீராமரிடம், ''தங்கள் விஷயமாய் நல்ல ஞானம் கொடுக்கக் கூடியதை எனக்குத் தயவுடன் உபதேசியுங்கள்'' என்று கேட்க, ஸ்ரீராமர் தேக ராமாயணத்தை விளக்கிக் கூறினார்:
* சச்சிதானந்த ஸ்வரூபம் என்ற கடலுக்கு, அலையாகிய அதனது இச்சையினால் சுத்த ஆத்மாவின் அம்சத்தின் வித்து உண்டானது. அதன் பெயர் ஆத்மா. புத்தி இதன் தாய், சுத்த சத்வ அந்தக்கரணமே அதன் தந்தை.
* அந்த ஆத்மாவின் நான்கு வேறுபாடுகளும் அதன் உறவுகள். அவை துரியாவஸ்தை, ஜாக்ரதாவஸ்தை, ஸ்வப்னாவஸ்தை, சுஷுப்தி அவஸ்தைகளாகும்.
* அவற்றின் இருப்பிடம் இருதயாகாசம். மனோ வேகம் என்பது வெளிப்பயணம். மனதின் கெட்ட விருத்திகளை ஒழிப்பதே மனதின் வேகத்தை அடக்குவது. அதன் பூர்வ சம்ஸ்காரங்களை அடக்குவதே மாயா யோகம்.
* ஆத்மா பல காலம் சம்சாரமாகிய காட்டில் சஞ்சரிப்பதற்குக் காரணம் புத்திதான். அங்கு டம்பத்தை அடக்குவது என்பது ஸ்திரமான பஞ்சபூத ஸ்வரூபமாகும்.
* ஆத்மாவுக்குச் சிரமபரிகாரம் செய்து கொள்ளும் இடம் பர்ணசாலை. காமம், குரோதம், லோபம் இவற்றை வெல்வது, முக்குண ஆசையை அடக்குவதாகும்.
* ஆசையை அடக்குவது என்பது சுத்த மாயையை அடைவதாகும். பிறகு ரஜோ ரூபமான மாயையானது ஜடராக்னியில் சேர்கிறது. பிறகு அஞ்ஞான சம்பந்தமான மாயை பிரிவதால் பெரிய வருத்தம் உண்டாகி, பின்னர் துக்கத்தின் பங்கமும் உண்டாகிறது. அப்போது அதனுடன் விவேகமும் பக்தியும் சேர்கின்றன.
* திரிகுணங்களுக்கும் அடைக்கலமான வீட்டில் அஞ்ஞானத்தைத் தாண்டும் உபாயம், லிங்கம் என்னும் பெயருடைய மதத்தை அடக்குவது எனப்படுகிறது. அதைத் தொடர்ந்து மத்சரமும், அகங்காரமும் அடக்கப்பட்டு, லிங்கதேகம் பிரிகிறது. பின்பு ஆனந்தமாகிய ஏக சுகம் அடைந்து, அதன் பின் மாயையை விடுவது சாத்விக நிலையை அடைவதாகும். சாத்வீகமான நிலை உத்தமமான இருதயாகாசம் சச்சிதானந்தம் என்ற பெயருள்ள மஹாகாசத்தில் இணைக்கப்படுகிறது. ஆத்மாவைச் சாகரத்தில் பிரவேசிக்கும்படி செய்வதே அதற்குத் தலையாய முக்தியாகும். நான்கு முக்தியிலும் அதுவே சாயுஜ்ய முக்தி.
சீதாதேவி இந்த உரையாடலைத் தனது மனதில் நன்றாய் நிலைநிறுத்தி, புத்தியால் ஆலோசித்து, தான் அறிந்து கொண்டதை ஆனந்தத்துடன் ராமரிடம் விவரிக்கிறாள்:
* சச்சிதானந்த ஸ்வரூபியான விஷ்ணுதான் கடல். அவருக்குப் பூபாரத்தைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாவதே அலை எனப்படுவது. இதனால் மங்களகரமான அவரது அம்சத்தின் ஸ்வரூபமாக கடலிலிருந்து வெளிப்படுகிறது எதுவோ அதுவே ஆத்மா. அதன் தாயாகிய புத்தியின் பிரதிபிம்பம்தான் கௌசல்யை. அந்த ஆத்மாவுக்குப் பிதாவான சுத்த சத்வ அந்தக்கரணம்தான் சத்ய பராக்ரமரான தசரத மகாராஜா.
* அந்த ஆன்மாவின் நான்கு பேதங்கள்தாம் ராமலட்சுமண பரத சத்ருக்னர்கள். அவர்களுள் சத்வகுணப் பிரதானமான துரிய அவஸ்தைதான் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி. ஜாக்ரதாவஸ்தைதான் லட்சுமணர். ஸ்வப்னாவஸ்தை பரதர், சுஷுப்தி அவஸ்தைதான் சத்ருக்னர். இவற்றிற்கு ஸ்தானமான ஹ்ருதயாகாசம்தான் அயோத்யா நகரம்.
* மனோவேகம் என்பது வெளியில் பயணம் – தீய சக்திகளை அழிக்க விசுவாமித்ரரின் யாகத்திற்குப் போவது. மனதின் சஞ்சலத்தை நிறுத்தி, கெட்ட எண்ணங்களை அழிப்பதே தாடகை வதம். எப்போதும் பரபரப்பாகவும் நிலையற்றும் இருக்கும் மனோவேகத்தைப் பங்கப்படுத்துவதே சிவதனுஸை முறித்தது. வில்லை முறித்ததன் மூலம் நீர் என்னை மணக்கச் சங்கல்பித்தது மாயா யோகத்தோடு சேர்வதாகும். அதுவே என்னைத் திருமணம் செய்து கொண்டது.
* சித்தத்தில் படிந்துள்ள முந்தைய சம்ஸ்காரங்களின் விதைகளைப் பிடுங்கி எறிந்ததே பரசுராமரின் அகங்காரத்தை அடக்கியது. புத்தியின் எதிர்மறை விளைவால் நீர் நாடுவிட்டு தண்டகாரண்யம் சென்றது கைகேயி என்ற புத்தியின் சூழ்ச்சி.
* கானகத்தில் நீர் அழித்த அரக்கர்கள் யாவரும் 'நானே எல்லாம்' என்ற ஆணவத்தின் வெளிப்பாடுகள். டம்பத்தை அடக்குவது என்பது ஸ்திரமான பஞ்சபூத ஸ்வரூபமான இந்த உடலுக்கு ஓய்வு தேடுவது. ஆத்மா சிரம பரிகாரம் செய்து கொள்ளும் இடமே பர்ணசாலை.
* காம, குரோத, லோபங்களை ஜபிப்பது என்பது ஆசையை அடக்குவது, அதன் வெளிப்பாடுகள் கரன், தூஷணன் வதம். மித மிஞ்சிய காமத்தை அடக்குவது போல திரிசிரஸ் என்ற அரக்கன் அழிவு, தவறான ஆசையை அழிக்காமல் மனதிலிருந்து அகற்றுவதே சூர்ப்பணகையைப் பங்கப்படுத்தி அனுப்பியது.
* மனிதனைப் பந்தங்களிலிருந்து விடுவிக்க நீர் புரிந்த உதவியே மிருக ரூபியான மாரீசனை அழித்தது. பிறகு சுத்த மாயையை அடைவதே தண்டகாரண்யத்தில் சத்வகுணம் பிரதானமான என்னை இடப் புறத்தில் அடைவதாம்.
* ஜடராக்னியில் ரஜோ ரூபமாய் இருப்பதாக எண்ணப்படும் மாயைதான் அக்னியில் பிரவேசித்த ரஜோ ரூபமான நான்.
* அப்போது தாமஸ ரூபமான மாயையின் வியோகம் என்பது தமஸ்வரூபிணியான என்னை ராவணன் அபகரித்துக் கொண்டு போனது. சுகமில்லா பெரிய வருத்தமே நான் உம்மை விட்டுப் பிரிந்தது. பிறகு துக்கத்தின் பங்கம்தான் கபந்த வதம், விவேகத்தை அடைவது சுக்ரீவ நட்பு.
* அதீத பக்தியை அடைவதே நீர் அனுமனை அடைந்தது, அவிவேகத்தை நாசம் செய்வதே நீர் வாலியைக் கொன்றது. பின்னர் உற்சாகத்துடன் சேருவதுதான் விபீஷண சரணாகதி. அஞ்ஞானத்தைத் தாண்டுவதற்கு வேண்டிய உபாயம் நீர் பெரிய சமுத்திரத்தில் அணைபோட்டது.
* மங்களகரமான திரிகுணங்களுக்கும் அடைக்கலமான லிங்கதேகத்தை அடைவதுதான் நீர் திரிகூட மலையின் மேலுள்ள இலங்கையை அடைந்தது.
* அங்கே மதத்தை அடக்குவதுதான் தாமஸமே உருவமான கும்பகர்ணனைக் கொன்றது. பொறாமையை அடக்குவது நீர் இந்திரஜித்தைக் கொன்றது. அங்கே எல்லாவற்றிற்கும் மேலான அகங்காரத்தை ஒழிப்பதே நீர் ராவணனை வதைத்தது.
* சத்வ, ரஜ, தாமஸ உருவில் மூன்று விதமாக இருந்த என்னோடு சேர்ந்தே நீர் மாயையோடு இணைவது எனப்படும்.
* இதயாகாசத்தைக் கடைசியாக அடைவது நீர் அயோத்திக்குத் திரும்பியது. இலங்கையிலிருந்து திரும்பியது என்பது லிங்கதேகத்தின் வியோகம்.
* ஆனந்தமான ஏகசுகம் என்பதுதான் அயோத்தியில் நீர் ராஜ்ய சுகங்களை அனுபவிப்பது.
* இனி வரப்போகும் நிகழ்ச்சிகளையும் நீர் வெளிப்படுத்தி உள்ளீர். மாயையை விடுவது என்பது வால்மீகியின் ஆசிரமத்தில் என்னைத் தாங்கள் விடப்போவது.
* மீண்டும் நீர் என்னை சத்வ மாயையோடு சேருவது இதயாகாசத்தை மஹா ஆகாசத்தில் லயிக்கும்படி செய்வது என்பது நீர் அயோத்தியை நீங்கி வைகுண்டம் செல்வது. சச்சிதானந்தம் என்ற சமுத்திரத்தில் பிரவேசிப்பதுதான் நீர் மானுட ரூபத்தை விட்டு விஷ்ணு ரூபத்தைக் காட்டுவது. சாயுஜ்யமானது உமது ஆத்மா முக்தியை அடைவது.
* ஏ ராம! சுப அசுபமான எந்தெந்தக் காரியங்கள் உம்மால் செய்யப்பட்டனவோ அவை எல்லாம் மக்கள் அறிவை அடைவதற்காகவும் உலக நன்மைக்காகவும்தான். சச்சிதானந்த ஸ்வரூபியும் நிர்க்குண ஆத்ம ஸ்வரூபமான உமக்கு அவற்றால் ஆகப் போவது ஒன்றும் இல்லை.
இந்த மங்களகரமான உரையாடலை நான் உணர்ந்ததால் ஜீவன் முக்தையாகிவிட்டேன். இந்த தேக ராமாயணத்தை நான் மாலையைப் போல் தரித்துக் கொண்டுவிட்டேன்.