நமது மிக நெருங்கிய, நல்ல நண்பர்களையும் உறவினர்களையும் இழந்திருப்போம். அதற்காக வருந்துபவர்கள், வால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் ஸ்ரீராமர் பரதனுக்கு அருளியவற்றைப் படித்து ஆறுதல் பெறலாம்...!
1. சேர்த்து வைப்பவை யாவும் ஒரு நாள் ஒன்றும் இல்லாமல் போகின்றன: உன்னத பதவிகள் தலைகீழாக மாறுகின்றன. சேர்ந்திருந்தவை பிரிந்து விடுகின்றன; வாழ்க்கை மரணத்தில் முடிவடைகிறது.
2. பழுத்த பழம் கீழே விழுந்தேயாக வேண்டும்; அதுபோல பிறந்தவன் இறந்துதான் ஆக வேண்டும்.
3. உறுதியான பெரிய தூண்கள் தாங்கும் கட்டடமும் நாளடைவில் சிதிலமடைந்து விழுந்து விடுவது போல, முதுமைக்கும் மரணத்துக்கும் வசமாகி மனிதர்களும் முடிவெய்துகிறார்கள்.
4. சென்ற இரவு மீண்டும் திரும்ப வருவதில்லை. யமுனை நதி கடலில் கலந்த பின் மீண்டும் திரும்புவது உண்டா?
5. வேனிற் காலத்து சூரியனின் செங்கிரணங்கள், நீரை வற்றச் செய்வது போல, இரவும் பகலும் மாறி மாறி வந்து சென்று, புவியிலுள்ள ஜீவன்களின் ஆயுளை அபகரித்துச் செல்கின்றன.
6. நின்றாலும் நகர்ந்தாலும் ஆயுள் குறைந்து கொண்டே போகிறது. நம்மைப் பற்றி நாம் வருந்த வேண்டுமே தவிர, மற்றவரைப் பற்றி ஏன் வருந்த வேண்டும்? ஆகவே இறைவனைப் பற்றியே சிந்தனை செய்.
7. நம்முடனே மரணம் பயணிக்கிறது, நம்முடனே இருக்கிறது. எவ்வளவு தூரம் போனாலும் மரணத்தை விட்டு நாம் விலக முடியாது.
8. தோல் தளர்ந்து சுருங்குகிறது. கேசம் நரைக்கிறது. மூப்பு மனிதனை ஆக்கிரமிக்கிறது. அதைத் தடுக்க என்ன செய்ய முடியும்?
9. சூரியன் உதித்து விட்டபின் பொழுது விடிந்து விட்டது என்று மனிதர்கள் களிப்படைகிறார்கள்; அஸ்தமித்துவிட்டது என்று மகிழ்வெய்துகிறார்கள். ஆனால் தமது ஆயுள் குறைந்து கொண்டு வருவதை அவர்கள் அறிவதில்லை.
10. ருதுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும்போது மக்கள் மகிழ்கிறார்கள். ஆனால் அத்துடன் அவர்களின் ஆயுளும் குறைந்துகொண்டே வருகிறதல்லவா?
11. பெரும் கடலில் இரண்டு மரத்துண்டுகள் ஒன்று சேருகின்றன. சிறிதுநேரம் சேர்ந்து சென்றபின் பிரிந்து விடுகின்றன. அதே போலத்தான் மனைவி, பிள்ளைகள், சுற்றத்தார் ஆகியவர்களும் ஒன்று சேர்ந்து, பிறகு கால வசத்தால் பிரிந்துவிடுகிறார்கள். இந்தப் பிரிவைத் தவிர்க்க முடியாது.
12. இயற்கையை மீறுவது என்பது எவராலும் முடியாதது. இறந்தவரைப் பற்றி வருந்துவதும் பயனற்றது.
13. மனிதன் போகும்போது வழியில் ஒரு யாத்ரீகர் கூட்டத்தைக் கண்டு, 'நானும் உங்களுடன் வருகிறேன்' என்று சொல்வதுபோலத்தான் வாழ்க்கைப் பயணமும்! நம் முன்னோர் அந்த வழியேதான் சென்றிருக்கிறார்கள். ஏற்கெனவே சென்று கொண்டிருக்கும் கூட்டத்தில் சேர்ந்து கொள்கின்றனர். இதே போன்று அநாதி காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் மாறுதலும் இல்லை; நாம் எப்படி குறைகூற முடியும்?
16. மனிதனின் விருப்பப்படியே எல்லாக் காரியங்களும் நடைபெறா. மனிதனை ஆட்டி வைப்பவன் இறைவன்.
14. பின் திரும்பாத வெள்ளத்தைப்போல, ஆயுளும் எப்போதும் குறைந்து கொண்டே வருகிறது. மனிதர்கள் மகிழ்ச்சியையே நாடுகிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆகையால் அவர்கள் தர்ம வழியில் சந்தோஷத்தைப் பெற முயல வேண்டும். ஏனெனில் அதுவே அவர்களைக் காக்கும்.