கார்த்திகைத் திருநாளில் இல்லத்தின் வாசல்களில் விளக்கேற்றி வழிபடுவது நமது மரபு. ஆனால், முற்காலத்தில் வாசலில் மட்டுமல்லாது, இல்லத்திற்கு அருகில் அமைந்திருக்கும் குப்பைக் கிடங்கிற்கும் அகல் விளக்கேற்றித் தீபாராதனை காட்டி வழிபடும் வழக்கம் இருந்தது.
இதனை “குப்பை_நாச்சியார் பூஜை” அல்லது “மூத்த தேவி வழிபாடு” என்று போற்றினர். குப்பைக்கு ஏன் தீபாராதனை காட்ட வேண்டும்..? இறைவனுக்குக் காட்ட வேண்டிய உயர்வை, மக்கும் கழிவுகளுக்கு ஏன் அளிக்க வேண்டும்..? என்ற வினாக்கள் எழலாம். அதன் பின்னணியில் செழுமையானதொரு வேளாண் அறிவியலும், பண்பாடும் பொதிந்துள்ளது.
பண்டையக் காலங்களில் இன்று இருப்பதைப் போன்ற நெகிழி (Plastic) மாசுகள் கிடையாது. அன்றாடக் கழிவுகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக மட்கக் கூடியவை. காய்கறி கழிவுகள், அடுப்புச் சாம்பல், வைக்கோல் மற்றும் மாட்டுச் சாணம் போன்றவற்றை இல்லத்திற்கு அருகில் ஓரிடத்தில் குவித்து வைப்பார்கள். நாளடைவில் அது ஒரு சிறு குன்று போல உயர்ந்து நிற்கும். அந்த இயற்கை உரக் கிடங்கையே நம் முன்னோர் “மூத்த தேவி” என்று பெயரிட்டு அழைத்தனர்.
விவசாயப் பணிகள் தொடங்கும் காலத்தில், குப்பைக் கிடங்கில் சேமிக்கப்பட்ட இந்த இயற்கை உரத்தினை (மூத்த தேவி) அள்ளிச் சென்று வயல்களில் இடுவார்கள். உரம் வயலுக்குச் சென்றால்தான், அங்கிருந்து “சிறுதேவி” எனப்படும் தானியங்கள் விளைந்து இல்லம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
“மூதேவி போனால்தான் சீதேவி வருவாள்” என்னும் பழமொழியை இன்று நாம் எதிர்மறையான பொருளில் கையாண்டு வருகிறோம். ஆனால் அதன் உண்மையான பொருள் இதுதான்:
“மூத்த தேவி” ஆகிய இயற்கை உரம் வயலுக்குச் சென்றால்தான், “சீதேவி” எனப்படும் மகசூலும் செல்வமும் இல்லம் தேடி வரும்.
இன்று நாம் கழிவுகளைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி அப்புறப்படுத்துகிறோம். ஆனால், குப்பையையும் ஒரு செல்வமாகக் கருதி, அதற்கு விளக்கேற்றிப் போற்றிய அந்த மேலான பண்பாடு வியக்கத்தக்கது. காரணங்கள் தெரியாமல் பல சடங்குகளைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் சூழலில், இத்தகைய விழுமியங்களை மீட்டெடுத்திட வேண்டும்.