அட்சதை என்பது முனைஉடையாத பச்சை அரிசியுடன் மஞ்சள் நீரைக் கலந்து பெறப்படுவதாகும். சுபகாரியங்களின் போது ஒரு இந்து சமுதாயத்தில மனநிறைவோடு குருவானவர்கள், பெரியோர் ஆகியோரது வாழ்த்து இடம் பெறுவது வழக்கம். இவ்வண்ணம் இவர்கள் ஆசிகள் வழங்கும் போது, அட்சதையிடுதல் மரபு.
திருமண வைபவத்தின் போது மணமக்களை அட்சதையிட்டு வாழ்த்துகின்றோம். இவ்வாழ்த்தின் போது, மங்கலப் பொருளான அறுகு, அட்சதை அரிசி, மலர் ஆகிய மூன்றையும் சேர்த்தே அட்சதையிட்டு வாழ்த்துதல் முற்காலத்தில் இடம்பெற்றது. இது அறுகரிசி இடுதல் என்று கூறப்பட்டது. காலப்போக்கில் இம்மூன்றிற்கும் பதிலாக நெல் இட்டு வாழ்த்துதல் இடம் பெற்றது. பின்னர் நெல் அரிசியாக மாறி அட்சதையிடுதல் இடம்பெற்றது. அட்சதையிடும் போது வாழ்த்தப்படுபவரின் தலைப்பகுதியிலிருந்தே அறுகரிசி இடவேண்டும் என்பது கருத்திற்கொள்ள வேண்டியதொன்றாகும்.
வாழ்த்துக்களில் முன்னோர் அறுகம்புல்லையும் சேர்த்தமைக்குரிய காரணத்தை நோக்குவோம்.
எழுத்துகளுக்கெல்லாம் எவ்வண்ணம் அகரம் முதலாவதாகத் திகழ்கின்றதோ, அதேபோன்றுதான், உலகில் முதலில் தோன்றியது அறுகம்புல் என்று சொல்லப்படுகின்றது. இதைக் கொண்டு இறைவனின் முதல் படைப்பான தொன்மை வாய்ந்த விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் அர்ச்சிக்க உகந்ததுவுமாயிற்று. அறுகம்புல்லை நோக்கின் இப்புல் ஒரே காம்பில் மூன்று முனைகள் அமைந்துள்ளதாக அமைந்திருப்பதைக் காணலாம். அவற்றின் நுனி கூர்மையாகவும் தோன்றும். வாழ்வில் வெற்றி அடைய, மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினையும் ஒருங்கிணைத்துத் தூய்மையான எண்ணத்தோடு நாம் வாழ்ந்தாக வேண்டும் என்னும் உண்மையை அறுகம்புல் விளக்கி நிற்கின்றது.
சுபகாரியங்கள், கிரியைகள் ஆகியவற்றின் முடிவில் "ஓம் சாந்தி' என மூன்று முறை கூறுதல் காணக்கூடியது. வாழ்க்கையில் உயிர்களுக்கு ஏற்படும் நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏற்படும் துயரங்கள், மற்றையோரால் நமக்கு ஏற்படும் துயரங்கள், பஞ்சபூதங்களால் நமக்கு ஏற்படும் துயரங்கள் என்று மூவகைத் துன்பங்களிலிருந்து எல்லோரையும் இறைவன் காப்பாற்றியருள வேண்டும் என்பதற்காகவே, "சாந்தி" மூன்று முறை கூறப்படுகின்றது.