இறைவனான சிவபெருமானின் திருவடியைக் காண வேண்டும் என திருமால் வராகாவதாரம் எடுத்துச் சென்று தேடினார். பிரம்மன் அன்ன உருவம் எடுத்து திருமுடி காண முயன்றார். இருவரும் அடிமுடி காணமுடியவில்லை என்பர். ஆனால் அடிமுடி காண முடியும்; கண்டவர்கள் உண்டு; இனியும் காண முடியும் என்கிற தகவல்களும் இருக்கின்றன.
மார்க்கண்டேயர் காலனைக் கண்டு நடுங்கிச் சிவபெருமானை அணைத்துக் கொண்டார். தம்மை வழிப்பட்ட மார்க்கண்டனைக் காப்பாற்றச் சிவபெருமான் எமனை எட்டி உதைப்பதற்காக திருவடியைத் தூக்கிய போது, சிவபெருமானது திருவடியைத் தரிசிக்கும் பேற்றை எமன் பெற்று உய்ந்தான் என்கிறார் அப்பர் பெருமான்.
வந்தி என்ற ஏழைப் பெண்ணுக்காகச் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்க வந்த கதை மிகப் பிரசித்தமானது. இறைவன் தன் கையால் பொற்பிரம்பு கொண்டு அடிவாங்கி மறைந்ததை அறிந்த அரிமர்த்தன பாண்டியன், ''எங்கள் நாட்டு ஏழைப் பெண்ணான வந்தி கொடுத்த பிட்டை வாங்கிச் சாப்பிட்டு, ‘என்றும் அடியார்க்கு எளியவன்’ என்பதைக் காட்டி அருளினாயே! இத்தகைய கருணையாளனான உன்னை என் எதிரில் வந்தும், கடவுள் என அறியாமல் மோசம் போனேனே! அன்னை இல்லாத உனக்கு இவள் அன்னையாக வந்தாளா? அவள் அன்புடன் அளித்த பிட்டைச் சாப்பிடும் போது அன்னையின் அன்பை அனுபவித்தாயா?'' என்றெல்லாம் ஏங்கி வருந்திப் புலம்பிய பாண்டியன், ``அடி முடி தேடித் திருமாலும் நான்முகனும் அலைந்தார்கள் என்பார்கள். ஆனால், வைகையை அடைக்க வந்த கூலியாட்களாக மதுரைக்கு வந்திருந்தால் சிவபெருமான் கால்தரைதோய நின்ற காட்சியையும் திருமுடிமேல் கூடையை வைத்து நின்ற காட்சியையும் கண்டு களித்திருக்கலாமே! நான் திருமாலையும் பிரமனையும் காட்டிலும் புண்ணியம் செய்துவிட்டேனா!'' என்றெல்லாம் இன்பமும் துன்பமும் வியப்பும் மிகுந்து பேசினான் என்பார் திருவிளையாடற்புராணமுடையார். `பிரமனும் திருமாலும் மண் சுமக்கும் மள்ளராய் வந்திலரே! வந்தக்கால் பண் சுமக்கும் சொல்லி பங்கன் பாதமுடி காண்பாரே' என்பர் பரஞ்சோதி மாமுனிவர்.
கலியுகத்தில் எல்லாருமே இறைவனின் அடி முடி காணமுடியும் என்பார் கோயிற்புராணமுடையார். கோயில் என்பது சைவருக்குச் சிதம்பரத்தைக் குறிக்கும் சொல். ''அச்சப்படும் என் மனமே! நீ தாமரையில் வாழும் பிரமனுமில்லை; திருமாலுமில்லை. தில்லையிலுள்ள நடராஜப்பெருமானும் திருவண்ணாமலை போல் அக்கினியாகக் காட்சி கொடுக்கவில்லை. ஏ மனமே! நீ பெரும் புண்ணியம் செய்துள்ளாய்''
''அம்மையோடு அப்பன் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் இடம் சிதம்பரம் மட்டுமே. கூத்தப்பெருமானோடு சிவகாமி அம்மையும் காட்சியளிக்கிறார். நடராஜ மூர்த்தியின் திருவுருவக் காட்சி பிறவியான பெருநோய்க்கு வீரமான மருந்து. குழந்தைக்குக் குடல்நோய் வந்தால் மருத்துவர் கடுமையான மருந்து கொடுக்க நேரலாம். அந்த வீரமுள்ள மருந்தின் காரத்தைக் குழந்தையின் குடல் தாங்காமல் குழந்தைக்கு ஆபத்து நேரலாம்! ஆனால் மருந்தைக் கொடுக்காவிட்டால் குழந்தைக்கு நிச்சயம் ஆபத்து நேரும். எனவே மருத்துவர் அந்த மருந்தை அன்னையிடம் கொடுத்து அவளைச் சாப்பிடுமாறு கூறி, அவளது பால் மூலமாகக் குழந்தையின் வயிற்றில் செல்லுமாறுசெய்கிறார். 'பாலுண் குழுவி பசுங்குடர் பொறாது என்ன நோயுண் மருந்து தாயுண்டாங்கு' என்பார் குமரகுருபரசுவாமிகள். ``அதுபோல் நடராஜா என்னும் மருந்தின் அருகில் நின்று, அதைத் தரிசித்து அனுபவித்து, தனது அருளான பாலுடன் கலந்து நமக்கு அம்மை சிவனருள் கிடைக்கச் செய்கிறாள். எனவே நீ பெரும்பாக்கியம் பெற்றுள்ளாய். நடராஜர் திருவடியைத் தூக்கிக் காட்டிக் கொண்டு நிற்கிறார். திருமுடியையும் காணலாம்'' எனத் தமது கோயிற்புராணத்தில் பாடுகிறார் உமாபதி சிவாசாரியார்.
இதன் வழியாக, உண்மையன்பும் ஆர்வமும் உள்ள உத்தமருக்கு இறைவனது முழு உருவமும் காண முடியும் என்பது விளங்குகிறது.