ஸ்ரீராமபிரான், சித்திரை மாதம் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரம் நான்காம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்த போது, கடக லக்னத்தில் தோன்றினார்.
அசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு, ஸ்ரீராமராக அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும் தேவர்களும் ஸ்ரீராமபிரானின் கர்ப்பவாசத்தை உற்சாகமாகக் கொண்டாடினார்கள். இதுவே 'கர்ப்போத்ஸவம்' எனப்படும்.
ஸ்ரீராமர் பிறந்ததைச் சிறப்பாகச் கொண்டாடிய நிகழ்ச்சி 'ஜன்மோத்ஸவம்' எனப்படும்.
கர்ப்போத்ஸவத்தைக் கொண்டாடும் வகையில் பிரதமை முதல் நவமி வரையில் ஒன்பது நாட்கள் ராமாயணப் பாராயணம் செய்வார்கள்.
ஜன்மோத்ஸவத்தைச் சிறப்பிக்கும் வகையில் நவமி முதல் அடுத்து ஒன்பது நாட்களும் ராமாவதார சர்க்கப் பாராயணம், பானக பூஜை, ஜபம், தியானம் போன்றவற்றைச் செய்வது மரபு.
பத்து நாட்களுக்கு முன்பே ராமாயணம் படிக்கத் தொடங்கி, ஸ்ரீராமநவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடிப்பார்கள்.
“ராம்” என்ற சொல்லை உச்சரித்தாலே விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்" என்பது பெரியோர்களின் கருத்தாகும்.