ஜடாமுடியில் சிவபெருமான் வைத்திருக்கும் சந்திரன் நம்முடைய இன்பமும் துன்பமும், மாறிமாறி வளர்பிறையாகவும், தேய்பிறையாகவும் வரும் என்பதைக் காட்டுகிறது.
அங்கே இருக்கும் கங்கை என்றும், எப்போதும் நாம் நம் மனதைக் கங்கையைப் போல வைத்திருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. கங்கையில் எவ்வளவோ அழுக்கும் அசுத்தமும் சேருகின்றன. ஆனால் அதன் தூய்மை ஒரு போதும் கெடுவதில்லை. அதைப்போல எவ்வளவோ ஆசாபாசங்கள் நம்மை அலைக்கழித்தாலும், நம்முடைய மனம் அதனால் கெட்டுப் போய்விடக் கூடாது.
ஒவ்வொரு நிமிடமும் நம்மைப் பாவக் குழியில் தள்ள நச்சுப்பாம்பாக சூழ்நிலை சுற்றிக் கொண்டு காத்திருக்கிறது. ஆனால் அந்த விஷம் உள்ளே இறங்க நாம் விட்டுவிடக் கூடாது. இதையே கழுத்தைச் சுற்றிய பாம்பை அணிந்த சிவபெருமான் விஷத்தைக் கண்டதில் தேக்கிக் கொண்டவராகக் காட்டுகிறார்.
மிருக உணர்ச்சிகள் நம்மைப் பாதிக்கலாம். ஆனால், அவற்றிலிருந்து நீங்கிய உயர்ந்த மனித உணர்வுடன் நாம் வாழவேண்டும். புலித்தோல் போர்த்திய பெருமான் அதையே நமக்குக் காட்டுகிறார்.
உடம்பின் ஒரு பகுதியில் தேவியை வைத்துக் கொண்டிருந்தாலும், சிவபெருமான் காமத்தை வென்றவர்; காமனையே எரித்தவர். அதைப்போல நாமும் உலகியலைப் பற்றி வாழ்ந்தாலும் காமத்துக்கு அடிமையாகாமல் அதைத் தூய்மைப்படுத்தி ஆன்மிகமாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.