1. தூயபக்தியில் வியாபாரத்தன்மை, இடைத்தரகு என்பது கிடையாது. இதில் பக்தன் ஜபம், தியானம் செய்துவிட்டு, “இறைவா, எனக்கு நீ உன் காட்சியைக் கொடு" என்று பேரம் பேசுவது கிடையாது.
விலை உயர்ந்த பொருளாக நாம் கருதும் நமது வாழ்க்கையை எந்த நிபந்தனையும் இல்லாமல் இறைவனுக்கு நாம் தர வேண்டும். 'நான், நான்' என்ற எண்ணத்தை அறவே அழித்துவிட்டு, அங்கு இறைவனை நிரந்தரமாக நாம் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
2. தூயபக்தியில் பயம் என்பது சிறிதும் கிடையாது. நம்மிடம் பயம் இருக்குமானால் அது நாம் இன்னும் ஆன்மிக முதிர்ச்சி பெறவில்லை என்பதையே காட்டுகிறது.
ஆண்டவனிடம் நமக்குப் பயம் இருந்தால், நாம் அவனிடம் தூய அன்பைச் செலுத்த முடியாது. நமக்கு நம் தாயின் மீது பயம் இருப்பதில்லை; அன்புதான் இருக்கிறது.
'நான்' என்ற மனநிலை அழியும் போது, நம்மிடமிருந்து பயம் போய்விடுகிறது, தூய பக்தி தானாகவே பிறக்கிறது.
3. பக்தியின் பயன் பக்திதான், பக்தியின் நிறைவு பக்திதான், பக்தியின் முடிவும் பக்தி தான். அதில் சுயலாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ராதை ஸ்ரீகிருஷ்ணனின் மீது பக்தி கொண்டிருந்தாள். அதற்கான காரணம் என்ன என்று ராதைக்குத் தெரியாது. அவளது கிருஷ்ண பக்தியில் சுயநலம் இல்லை, சுயலாபம் இல்லை, உள்நோக்கம் எதுவுமில்லை, பேரம் பேசும் வியாபாரத்தன்மை இல்லை, இலௌகிகத்தின் நிழலும் இல்லை. அதுவே பக்திக்காகவே பக்தி செலுத்துவது என்ற தூயநிலை.