திருவானைக்கா கோயிலில் நான்காவது மதிலுக்கு 'நீறிட்டான் மதில்' என்று பெயர்.
அந்தப் பெயர் வந்ததற்காக வழங்கப்படும் கதை ஒன்று இருக்கிறது.
அந்தக் கோயிலில் மிகவும் பெரிய மதிலே இதுதான். இந்த மதில் கட்டப்பட்ட போது சிவபெருமானே சித்தராக அங்கு எழுந்தருளி இருந்தார்.
மதில் கட்டும் வேலையாட்களுக்கு நாள்தோறும் அவர் திருநீற்றையே அள்ளிக் கூலியாகக் கொடுத்து வந்தார்.
அந்தத் திருநீறு அவர்கள் உண்மையில் பாடுபட்ட அளவுக்கு ஏற்பப் பொன் துகளாக மாறியது.
திருநீறே கூலியாகக் கொடுக்கப்பட்டதால் அந்த மதில் 'திருநீற்று மதில்', 'நீறிட்டான் மதில்' என்று வழங்குகிறது.