தீட்சை என்ற வடசொல் திரிந்து தீக்கை ஆயிற்று. தீ - கெடுத்தல்; ¨க்ஷ - கொடுத்தல். அதாவது பாசத்தைக் கெடுத்து, மோட்சத்தைத் தரும் பொருட்டு குருவிடமிருந்து பெறும் மந்திர உபதேசம் பொதுவாகத் ‘தீக்கை' எனப்படும்.
தீக்கையில் பல வகைகள் உள்ளன.அவற்றுள் மூன்று முக்கியமானவை. அவை;
1. சமயத்தீக்கை
‘உபநயனம்' எனப்படும் பூணூல் போடுவது எவ்வளவு இன்றியமையாததோ அது போல ‘சைவசமயி' என்பவருக்குச் சமயத்தீக்கை அவசியமாகும். பூணூல் அணியாதவர், வேதியர் ஆகார்; அவ்வாறே “சமயத்தீக்கை பெறாதவர் சைவசமய ஆகார்." இது சமய நுழைவுக்கு அனுமதி பெறுவதாகும்.
2. விசேட தீக்கை
கிரியாபாத யோகபாத முறைகளில் செய்யப்படுவது. இந்தத் தீக்கை பெற்றவரே சிவலிங்க மூர்த்தியையோ, மகேசுவர மூர்த்தியையோ எழுந்தருளச் செய்து குருவிடம் பெற்றுச் ‘சிவபூசை' செய்வதற்குரிய தகுதி உடையவர் ஆவார். இந்த தீக்கையினைப் பெற்ற பின்னர் செய்யப்படும் புறப்பூசை மற்றும் அகப்பூசைகளில், சிவபெருமான் முனைந்து நின்று அருளை வழங்குகிறான் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.
3. நிருவாண தீக்கை
பாசபந்தம் அனைத்தையும நீக்கிச் சிவபெருமான் திருவடியை அடையும்படி செய்யும் தீக்கை நிருவாண தீக்கையாகும். இந்தத் தீக்கையில் குருநாதர், சீடனது மலத்தை நீக்கும் பொருட்டு, ஆறு அத்துவாக்களிலும் சஞ்சிதமாயிருக்கும் கன்மங்களை எல்லாம் போக்குவார். கன்மம் நீங்கவே மாயாகாரியங்களும் ஆணவத்தடையும் அறவே நீங்கும்; அப்போது திரோதான சத்தி அருட்சத்தியாக மாறி, ஞானத்தை வழங்கும். இவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களை சிவஞானபாடியத்தில் காணலாம்.
சமயத்தீக்கையின்போது, அணிந்துகொள்ள வேண்டிய ஒவ்வொரு அங்கத்திலும் உரிய மந்திரம் சொல்லி, திருநீற்றைத் தண்ணீரில் குழைத்து இட்டுக் கொள்ள வேண்டும். பின்பு உருத்திராட்சிர மாலையைக் கொண்டு, குருநாதர் உபதேசித்தபடி அஞ்செழுத்து மந்திரத்தை மனத்தில் நூற்றெட்டுமுறை எண்ணவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு தீக்கைக்கும் ஒவ்வொரு வகை மந்திரம் உண்டு. தீக்கைகளின்போது, கைவிரல்களால் செய்யப்படும் பல்வேறு முத்திரைகளும் உண்டு. இவற்றை எல்லாம் சற்று முயன்று கற்க வேண்டும்.