உத்தவரின் கேள்விகளுக்கு கிருஷ்ணர் வழங்கிய பதில்கள் இவை. பாகவதம் 11-வது ஸ்கந்தம் 19-வது அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கிறது.
உத்தவர் கேட்ட கேள்விகளும், அதற்குக் கிருஷ்ணர் அளித்த பதில்களும் இங்கே:
1. யமம், நியமம் என்பவை யாவை?
அகிம்சை, வாய்மை திருடாமை, பற்று துறத்தல், வெட்கம், பொருள் சேர்க்காமை, ஆஸ்திக்யம், பிரம்மசரியம், மௌனம், தைரியம், பொறுமை, அபயம் ஆகியவை யமம் எனப்படும்.
புனிதம், ஜபம், தவம், ஹோமம், நம்பிக்கை, விருந்தோம்பல், வழிபாடு, புனித நீராடல், பரோபகாரம், மகிழ்ச்சி, குருசேவை ஆகியவை நியமம்.
2. சமம் என்பது யாது?
புத்தியைக் கடவுளிடம் நிறுத்துவது.
3. தமம் என்பது என்ன?
புலன்களை வெளியே செல்லாமல் கட்டுப்படுத்துவது.
4. திதிக்ஷை யாது?
நமக்கு முன்வினைகளால் வரும் துன்பங்களைச் சகித்துக்கொள்வது.
5. தைரியம் யாது?
நாக்கையும் பெண்ணாசையையும் அடக்கும் துணிவு.
6. தானம் யாது?
தண்டிக்கத்தக்க குற்றம் புரிந்தவரிடமும் சினத்தைக் காட்டாமல் இருப்பது.
7. பராக்கிரமம் என்பது என்ன?
இயற்கையாக ஏற்படும் தீய பழக்கங்களைக் களைவது.
8. தவம் யாது?
உலக இன்பங்களில் ஆசையைத் துறப்பது.
9. உண்மை எது?
இன்ப துன்பம் போன்றவற்றில் சமநிலை.
10. ருதம் என்ன?
எப்போதும், எங்கும் இனிதாகப் பேசுவது.
11. தியாகம் யாது?
எல்லாவித உலகியல் முயற்சிகளையும் விலக்குவது.
12. பணம் யாது?
அறமே சிறந்த பணம்.
13. யாகம் எது?
பகவான் விஷ்ணுதான் யாக வடிவமாக இருப்பவர்.
14. தட்சணை என்பது என்ன?
அறிவைப் பரப்புவதுதான் சிறந்த தட்சணை.
15. பலம் யாது?
மூச்சை அடக்கும் பிராணாயாமமே பலம்.
16. பகம் யாது?
ஈஸ்வரனின் ஆறு மேன்மை குண மகிமையே பகம்.
17. லாபம் எது?
இறைபக்தியே சிறந்த லாபம்.
18. கல்வி எது?
எதனால் ஆத்ம ஸ்வரூபத்தில் வேற்றுமை எண்ணம் விலகுமோ, அதுவே கல்வி.
19. வெட்கம் எது?
தீயவற்றில் ஏற்படும் அருவருப்பு.
20. எது செல்வம்?
எதையும் எதிர்பாராமலிருக்கும் தன்மை.
21. இன்பம் எது?
இன்ப - துன்ப வேறுபாடு தோன்றாத நிலை.
22. துன்பம் எது?
புலன்களின் சுகத்தை விரும்புவது.
23. செல்வந்தன் யார்?
நற்குணங்கள் நிரம்பியவன்.
24. ஏழை யார்?
மனதில் திருப்தியற்றவனே ஏழை.
25. வருந்தத்தக்கவன் யார்?
புலன்களை அடக்காமல் திரிபவன்.
26. சிறந்தவன் யார்?
சத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் கடந்தவன்.
27. குற்றம் யாது?
இது குற்றம்; இது நன்மை என்ற பாகுபாடு உணராமல் இருப்பது.
28. குணம் எது?
குணம், குற்றம் என்ற வேறுபாட்டை விடுவதே சிறந்த குணம்.