இளம் பெண்களுக்கான பாவை நோன்பு
உ. தாமரைச்செல்வி
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, நீராடிச் சுத்தமான ஆடைகளை அணிந்து இறைவனை வழிபடும் இளம் பெண்களுக்கு, அவர்கள் விரும்பியபடி சிறந்த கணவன் அமைவான் என்பது தொன்ம நம்பிக்கை. இந்து சமயத்தின் இரு பெரும் பிரிவுகளில் சைவம் இதைத் திருவெம்பாவை நோன்பாகவும், வைணவம் இதைத் திருப்பாவை நோன்பாகவும் கொண்டிருக்கிறது.
திருப்பாவை நோன்பு
வைணவப் பெரியார்களுள் ஒருவரான விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) காட்டில் கண்டெடுத்து வளர்த்து வந்த குழந்தை கோதைக்கு இளம் வயதிலேயே கண்ணன் மீது பக்தியும், அன்பும் அதிகமாக இருந்தது. கண்ணன் மீது அளவற்ற அன்பு கொண்ட கோதை கண்ணனையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பினார். இதற்காகத் தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்து கொள்வார். ஒவ்வொரு நாளும் கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை, அவருக்குத் தெரியாமல் எடுத்துத் தான் அணிந்து கொண்டு, கண்ணாடி முன்பு நின்று, தான் கண்ணனுக்கு ஏற்றவளாக இருக்கிறோமா என்று பார்த்து மகிழ்ந்து கொள்வார். அதன் பின்னர், அம்மாலையைத் தான் எடுத்த இடத்திலேயே திரும்பவும் கொண்டு போய் வைத்து விடுவார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கு சூட்டப்பட்டு வந்தன.
ஒரு நாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்து கொண்டார். அன்று அவள் சூடிய மாலையை ஒதுக்கி விட்டுப் புதிய மாலை ஒன்றைத் தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். ஆனால், அன்றிரவு அவரது கனவில் தோன்றிய இறைவன், கோதை அணிந்த மாலைகளே தனக்கு விருப்பமானது என்றும், அதையே தனக்குச் சூட்ட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதனால் கோதை, "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்பட்டார்.
இந்நிலையில் விஷ்ணுசித்தர் ஆண்டாளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார். இத்திருமண ஏற்பாட்டை மறுத்த ஆண்டாள், தான் திருவரங்கம் கோயிலில் இருக்கும் இறைவன் திருவரங்கனையே மணப்பேன் என்று பிடிவாதம் செய்தார். இதனால் விஷ்ணுசித்தர் மிகுந்த கவலையடைந்தார்.
இதைத் தொடர்ந்து, ஆண்டாள் ஸ்ரீ பாகவதத்தில், கோகுலத்து இடைக்குலத்து இளம் பெண்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, தோழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணர் வரலாற்றுப் பாடலைப் பாடியபடியே நீராடிப் பின், மணலில் கார்த்தியாயினி உருவம் அமைத்து, அத்தேவியிடம் கண்ணனே தங்களுக்குக் கணவனாக வர வேண்டும் என்று வேண்டுவதை நினைவில் கொண்டு, தானும் இறைவனைக் கணவனாக அடைந்திட, மார்கழி மாதத்தில் அதற்கான வழிபாட்டைத் தொடங்கினார். இந்த வழிபாட்டில், மார்கழி மாதத்தில் முப்பது நாட்களுக்கும், முப்பது பாடல்களை இயற்றி இறைவனைப் பாடல்களால் பாடி வழிபட்டார். ஆண்டாள் இயற்றிய இந்த முப்பது பாடல்களும் திருப்பாவை எனப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து, விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றிய இறைவன், ஆண்டாளை மணப்பெண்ணாக அலங்கரித்துத் திருவரங்கம் கோயிலுக்கு அழைத்து வரும்படி தெரிவித்தார். இதன்படி ஆண்டாள் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டுத் திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோயில் கருவறைக்குள் சென்ற ஆண்டாள் இறைவனுடன் ஒன்றாகக் கலந்தாள். இறைவனையே கணவனாக அடைய வேண்டுமென்று விரும்பிய ஆண்டாளின் எண்ணமும் நிறைவேறியது.
இறைவனே கணவனாக வர வேண்டும் என்று விரும்பிய ஆண்டாள் மார்கழி மாதப் பாவை நோன்புக்கு இயற்றிய திருப்பாவையில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல் திருப்பாவை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, மார்கழி மாதத்தில் இளம் பெண்கள் விடியும் முன்பாக எழுந்து, அருகிலுள்ள நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி, அதன் பிறகு அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று இறைவனைப் பாடி வழிபட வேண்டும். இக்காலத்தில் நெய் மற்றும் பால் உண்ணாமலும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக் கொள்ளுதல் போன்ற அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தகாதனவற்றைச் செய்யாமலும், நற்செயல்களில் ஈடுபட்டு எந்நேரமும் இறைவன் குறித்த சிந்தனையுடன் திருப்பாவை பாடி வழிபாடுகள் செய்ய வேண்டும். இத்துடன் ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களையும் பாடி வழிபடலாம். திருப்பாவை நோன்பு மேற்கொள்ளும் இளம் பெண்களுக்கு அவர்கள் விரும்பியபடி சிறந்த கணவன் அமைவான் என்பது வைணவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
சங்ககாலப் பாடல் செய்தி
மகளிர் கடற்கரை மணற்பரப்பிலிலும், ஆற்றங்கரையிலும் வண்டல் மண் கொண்டு பாவை (பொம்மை) போன்ற உருவம் செய்து விளையாடும் “வண்டல் அயர்தல்” எனப்படும் விளையாட்டு குறித்த செய்திகள் சங்க காலப் பாடல்களில் இடம் பெற்றிருக்கிறது. தாம் விரும்பிய வண்ணம், தமக்கு ஏற்ற கணவர் கிடைக்க வேண்டும் என்று தைத்திங்கள் முழுவதும் நோன்பிருந்து வழிபடும் இந்நோன்பை “தை நீராடுதல்” என்றும் “அம்பா ஆடல்” என்றும் அழைப்பதுண்டு.
திருவெம்பாவை நோன்பு
மார்கழி மாதத்தில் இளம் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியர்களுடன் அருகிலுள்ள நீர் நிலைகளுக்குச் சென்று சிவன் - பார்வதி புகழ் பாடியபடி நீராடிப் பின்பு வழிபடும் முறையினைக் கண்ட மாணிக்கவாசகர், இந்நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, இருபத்தொன்று பாடல்களில் திருவெம்பாவை பாடி இறைவனை வழிபட்டார்.
மார்கழி மாதத் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளை இறுதி நாளாகக் கொண்டு, அதற்கு முன்பாக வரும் ஒன்பது நாட்களையும் சேர்த்து மொத்தம் பத்து நாட்கள் திருவெம்பாவை நோன்பு கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாட்களில் இளம் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடை அணிந்து கொண்டு அருகிலுள்ள நடராஜர் கோயிலுக்குச் சென்று சிவகாமி உடன் இருக்கும் நடராஜர் முன்பாகத் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடி வழிபட வேண்டும். இந்நோன்பை இளம் பெண்கள் மட்டுமின்றி, சிவ பக்தர்களும் மேற்கொள்கின்றனர்.
இந்நோன்புக் காலத்தில் இளம் பெண்களும், இந்நோன்பை மேற்கொள்ளும் சிவ பக்தர்களும் ஒரு நேர உணவாக அவித்த உணவினை மட்டுமே உண்ண வேண்டும். திருவெம்பாவைப் பூசையின் போது, இறைவனுக்குப் பிட்டு படையலாக வைக்கப்படுகிறது. இதனால் இப்பூசையினைப் பிட்டுப்பூசை என்றும் அழைப்பதுண்டு. இந்நோன்பின் இறுதி நாளான திருவாதிரை நாளன்று இறைவனுக்குக் கேழ்வரகுக் களி படையலாக படைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
திருவெம்பாவை நோன்பு மேற்கொள்ளும் இளம் பெண்களுக்கு அவர்கள் விரும்பியபடி சிவ பக்தியுடையவன் கணவனாக அமைவான் என்பதும், சிவ பக்தர்கள் வேண்டியவற்றைப் பெறுவார்கள் என்பதும் சைவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
மார்கழி மாதத்தில் இளம் பெண்கள் அவர்கள் விரும்பும் ஏதாவதொரு வழியில் பாவை நோன்பைக் கடைப்பிடித்து, மிகச் சிறந்த கணவரைப் பெற்று இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியடையலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.