தேவர்கள் திரிபுரத்து அசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பம் செய்து கொண்ட பொழுது, திருக்கயிலை உடையாரின் மூன்று திருக்கண்களினின்றும், பொழிந்த நீரில் தோன்றிய மணியாம். இந்தக் காரணத்தினால் அதற்கு ருத்திராட்சம் என்கிற பெயருண்டானது. (ருத்திரன் - சிவன், அக்ஷம் - நேத்திரம்) அதற்குக் கண்மணியென்றும் பெயர். சிவபூசை செய்கிறவர்கள் கழுத்தில் ருத்திராட்சமில்லாமல் பூசித்தால் அந்தப் பூசையைப் பரமசிவன் அங்கீகரித்துக் கொள்ளமாட்டார். ஆதலால் சிவபூசை செய்கிறவர்கள் உருத்திராட்சக் கண்டிகை அவசியம் தரித்துக் கொள்ள வேண்டும்.
உச்சியிலொருமணி, காதொன்றுக்கு ஆறுமணியாக இரண்டு காதுக்கும் பன்னிரண்டு மணி, சிரசில் நாற்பது, கழுத்தில் முப்பத்திரண்டு, மார்பில் நூற்றெட்டு, புயத்தில் முப்பத்திரண்டு, கைகளில் இருபத்துநாலு எனும் எண்ணிக்கையில் உருத்திராட்சம் தரிக்க வேண்டும்.
உருத்திராட்சத்தின் இடையிடையே பவளம், ஸ்படிகமணி, பொன்மணி இவைகளைக் கோத்து அணிய வேண்டும். இவைகளுமன்றி வில்வப்பழ வோட்டையும் சேர்க்கலாம். இவ்வாறு சேர்க்காமல் உருத்திராட்சங்களை மாத்திரம் கோர்த்துத் தரித்துக் கொண்டால் எத்தனை மணி சேர்த்தாலும் ஒருமணி அணிந்ததாலுண்டாகும் பலனே கிடைக்கும். இந்த உருத்திராட்சங்களில் ஒரு முகம், பதினொரு முகம், பதினான்கு முகமுள்ள மணிகளை வைத்துப் பூசித்தாலும் சிவார்ச்சனை செய்ததாலுண்டாகும் பலன் கிடைக்கும்.
மதுபானமும், மாமிச உண்டியும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய் உள்ளவர் உருத்திராட்சம் அணிந்து கொள்ளலாம். உருத்திராக்கம் தரித்துக் கொண்டு மதுபானம் அருந்துபவர்கள், மாமிச உணவு உண்பவர்கள் நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அனுபவிப்பர் என்கின்றனர்.