சைவ சமயக் கோயில்களில் நந்தி உருவத்தை ஒரு துணியில் எழுதி அதற்குப் பூசைகள் செய்து கயிற்றில் கட்டிக் கொடி மரத்தின் உச்சிக்கு ஏற்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெறுகிறது.
இக்கொடியேற்றத்திற்கான தத்துவமாக, இரு குறிப்புகள் சொல்லப்படுகின்றன. அவை;
1. சமம், விசாரம், சந்தோசம், சாதுசங்கமாகிய நான்கு குணங்களையும் கால்களாக உடையது நந்தி. அது வெள்ளை நிறம் பொருந்திய பரிசுத்த தர்ம தேவதை. அதனை ஒப்ப ஆன்மாக்கள் தூய்மை உடையவர்களாகி, அந்நான்கு குணங்களையும் உடையவர்களானால், அவர்களை இறைவன் அவர்களிருக்கும் நிலையிலிருந்து மிக உயர்த்திவிடுவான் என்பதை இது குறிக்கிறது.
2. திருவிழாவின் முதல்நாளில் இக்கொடி ஏற்றுதலின் நோக்கமாவது, திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதம் அடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்யப் போகின்றான் என்பதாகும்.