தொண்டகப்பறை (குறிஞ்சி), துடிப்பறை (பாலை) , ஏறுகோட்பறை (முல்லை), மணப்பறை மற்றும் கிணைப்பறை (மருதம்) , மீன்கோட்பறை (நெய்தல்) என்று ஐந்திணைகளுக்கான பறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இவை தவிர, வேறு சில பறைகளும் அந்த நாளில் இருந்திருக்கின்றன. புறநானூற்றில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. அவை;
1. அரிப்பறை
அரிப்பது போல ஓசை எழுப்பும். வயல் வெளியில் பறவைகள், இலைகளின் மீது உரசிச் செல்லும் சப்தம் போலவும், பெண்டிர் அணிந்த நகைகள் ஒன்றனோடு ஒன்று உரசுவது போலவும் என்று அரிப்பறை ஓசை உவமை காட்டப்படுகிறது.
2. அனந்தன் பறை
சுடுகாட்டுப் பகுதிகளில், பேயாட்டம் ஆடும் மகளிர் இதைக் கொட்டுவர். சரசரவென்று பாம்பு செடிகளுக்கிடையே ஓடும் ஓசை போல் இருக்கும். இதன் ஓசை கேட்டு பருந்துகள் வருமாம்.
3. ஆகுளிப்பறை மற்றும் 4. சிறு பறை
மிகச் சிறிய, கைக்கு அடக்கமான பறை இது. பாணர்கள் யாழுடன் எடுத்துச் செல்லும் பறை. அரசனைக் குறித்தோ, கடவுளைக் குறித்தோ பாடுவதற்குப் பயன்படுவது. இதை விடிவதற்கு முன் கொட்டுவார்கள்.
5. சல்லிப்பறை
இதைப் பெரும் பறை என்பார்கள். விழாக்களிலும், ஊர்வலங்களிலும் கொட்டுவார்கள்.
6. சாக்காட்டுப்பறை
இது சாவுக்கு அடிக்கும் பறை.
7. செருப்பறை
அரசன் போர்க்களத்தில் நுழையும் போது அடிப்பது. யானைப் படைக்கு முன்னால் அடித்துச் செல்வர்.
8. போர்ப்பறை
இது போர் அறிவிக்கும் பறை. போருக்குச் செல்லும் போது அடிக்கும் பறை.
9. நெய்தல் பறை
சாக்காட்டுப் பறை போல, சாவின் போது நெய்தல் நிலத்தில் அடிக்கபடுவது.
10. தடாரிப்பறை
இதைக் கிணைப் பறை என்றும் பம்பைப் பறை என்றும் கூறுவர். இது உடுக்கை அல்லது உடுக்கை போன்றதாக இருக்கலாம்.
11. ஒரு கண் பறை
அளவில் பெரியதான இப்பறையில், கண் போன்ற அடையாளம் தெரியும். அது யானையின் பாத வடிவில் இருக்கும், செய்திகளை அறிவிப்பதற்கும், போர்க்களங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது.
12 மணப்பறை
திருமணங்களில் கொட்டப்படுவது.
புறநானூறில் ஆங்காங்கே சொல்லப்படும் இந்த 12 பறைகளில், ஆகுளிப் பறையும், சிறுபறையும் மென்மையாகவும், பாடலுக்கு இசைந்தும் கொட்டப்படுவதுடன், கடவுளைக் குறித்து விடிவதற்கு முன்பே கொட்டப்படுவதால், ஆண்டாளும் அவள் தோழிகளும், கொட்டிய பறை சிறு பறை அல்லது ஆகுளிப் பறை என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆண்டாள் பாசுரங்களில்,
1. பறை தருவான் (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும்(பாசுரம்- 10)
4. அறை பறை (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப் பறைகொண்டு (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை (பாசுரம் -28)
9. இற்றைப் பறை கொள்வான் (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை (பாசுரம் -30)
என்று 10 இடங்களில் பறை குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
இவற்றுள், 26 -ஆம் பாசுரத்தில் வரும் சாலப்பெரும் பறை, மேற் கண்ட 12 பறைகளுள் சல்லிப்பறையை ஒத்திருக்கிறது. சல்லிப்பறை என்பது விழாக்களில் கொட்டப்படுவது. சுற்றுப்புறத்து ஓசைகளையும் மீறி ஓங்கி ஒலிக்க வேண்டிய பறை. ‘மாலே மணி வண்ணா’ எனத் தொடங்கும் பாசுரத்தில், ‘சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே’ என்று ஆண்டாள் கூறும் வர்ணனை இறைவன் வரும் வீதி ஊர்வலம் போல உள்ளது.