அழகிய மணவாள தாசர் என்ற ஓர் அடியவர். இவர், ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’ என்று அழைக்கப்படுபவர். இவர் எழுதிய திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து மாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்க நாயகர் ஊசல் திருநாமம், திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி எனும் எட்டு நூல்களின் தொகுப்பினை ‘அஷ்டப்பிரபந்தம்’ என்பர்.
இத்தொகுப்பிலான திருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ளது. அப்பாடல்;
“அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்த ளூருறை எந்தைபெம் மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை
எவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே !
ஓதநீர் ஞாலத் துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே”
எனும் இந்தப் பாடலில் மாலவன் மகிழ்ந்து உறையும் தலங்களும், அவருடையத் திருநாமப் பெருமையும் சொல்லப் பெற்றுள்ளன.