ஒரு முறை கிருஷ்ணர் வழிபாடு செய்வதைக் கண்ட ருக்குமணி அவரிடம், “தாங்களே இறைவன், தாங்கள் யாரை வழிபடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்குக் கிருஷ்ணர், “இந்தப் பூமியில் வாழும் ஆறு வகையான மக்களை நான் வணங்கி வழிபடுகிறேன்” என்றார் அவர்.
கிருஷ்ணர் வணங்கி வழிபடும் ஆறு வகையான மக்கள் இவர்கள்தான்;
1. தினமும் அன்னதானம் செய்வோர்
ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் அல்லது நிலத்தில் அறுவடையாகும் விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொடுத்து விட வேண்டும் என்கிற நிலை இருந்த காலம் அது. விளைச்சலில் ஒரு பகுதி போக, மீதி ஐந்து பகுதிகளை அவர் ஐந்து பேரைப் பாதுகாக்கப் (பஞ்ச யக்ஞத்துக்கு) பயன்படுத்தவேண்டும். விருந்தினர்களுக்குச் சாப்பாடு போட்ட பின்புதான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும். விருந்தாளி என்பவர் இறைவனுக்குச் சமம் என்று வேதம் கூறுகிறது. அந்தக் காலத்தில் தான் உண்பதற்கு முன்னால் வாசல் திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்து யாரேனும் விருந்தாளிகள் அல்லது வழிப்போக்கன் வருகிறார்களா என்று பார்த்துவிட்டே உணவருந்தச் செல்வார்கள். பிரதிபலன் எதிர்பார்க்காமல் அன்னம் இடுவோரை கிருஷ்ணன் வணங்குகிறார்.
2. தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்
அந்தக் காலத்தில் ஏழு வயதில் பூணூல் போட்டவுடன் பிராமணச் சிறுவர்கள் சமிதாதானம் என்று தினமும் அக்னி வளர்த்து சமித்துக்களை நெய்யுடன் அக்னியில் ஆகுதி கொடுப்பார்கள். குருகுலம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் இளைய பருவத்திலேயே திருமணமும் நடந்துவிடும். பின்னர் அவர்கள் தினமும் ஔபாசனம் என்ற அக்னி காரியத்தைச் செய்து வருவர். இதை தவிர அக்னிஹோத்ரம் என்ற அக்னி காரியம் சூரியனை உத்தேசித்து சரியாக சூரியன் உதிக்கும் காலத்திலும், அஸ்தமனம் ஆகும் காலத்திலும் நடத்த வேண்டும். இதை எல்லோரும் செய்துவிட முடியாது. தனது தந்தை ஒரு அக்னிஹோத்ரியாக இருந்தால் மட்டுமே தானும் அக்னிஹோத்ரம் செய்ய முடியும். இவர்கள் காணக்கிடைப்பது அபூர்வம். இப்படித் தவறாமல் செய்து வருவோரை கிருஷ்ணன் வணங்குகிறார்.
3. வேதாந்தம் அறிந்தவர்கள்
வேதங்கள் நான்கு. அதன் முடிவில் இருப்பது உபநிஷத் (வேத+அந்தம்/முடிவு). அதை உணர்ந்தவர்கள் வேதாந்திகள். அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி போன்ற ஞான உணர்வு படைத்தவர்கள். வேதாந்தத்தில் நாட்டம் ஏற்பட வேண்டும் என்றால் பல ஜென்மங்களில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். உலக விஷயங்களைத் துறந்து, வேதாந்த விஷயங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வேதாந்த சிந்தனையிலேயே வாழ்வைக் கழிக்கும் வேதாந்திகளைக் கிருஷ்ணன் வணங்குகிறார்.
4. சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து சதாபிஷேகம் செய்துகொண்டோர்
சிவனுடைய தலையில் இருப்பது மூன்றாம் பிறைச் சந்திரன். அதை மாதம் தோறும் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளில் காணலாம். அடுத்த முறை காண 29 நாட்கள் காத்திருக்க வேண்டும் இப்படி ஆயிரம் முறை காண 81 ஆண்டுகள் பிடிக்கும். அப்பொழுது அவர்கள் சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். இவர்களைக் கிருஷ்ணன் வணங்குகிறார்.
5. மாதா மாதம் உபவாசம் இருப்போர்
மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகளிலும் உபவாசம், உண்ணா நோன்பு கடைப்பிடிக்க வேண்டும். அதையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். சுத்த உபவாசம் என்பது நிர்ஜலமாக (தண்ணீர் கூட பருகாமல்) அல்லது தண்ணீர் மட்டுமே பருகி உபவாசம் இருப்பது. இவர்களைக் கிருஷ்ணர் வணங்குகிறார்.
6. பதிவிரதையான பெண்கள்
கற்புக்கரசியாக விளங்கும் பெண்களைக் கிருஷ்ணன் வணங்குகிறார்.