இன்டலியப்பன் எனும் பெயரில், தாத்தா சுவாமியாக இருக்கும் ஒரு தெய்வத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இன்டலியப்பன் என்கிற பெயர் மட்டுமில்லை, இவரின் தோற்றமும், வழிபாடும் பக்தர்களுக்கு உறவை ஏற்படுத்துகிறது. எப்படி?
சிவனை நண்பராகப் பார்த்தார் சுந்தரர். மீனாட்சி அன்னையை மகளாகப் பெற்றாள் காஞ்சனமாலை. அண்ணாமலையாரை தந்தையாக்கி மகிழ்ந்தார் வல்லாள மகாராஜா. அபிராமி தேவியை தாயாகக் கருதினார் அபிராமி பட்டர். கண்ணனைக் காதலித்து உருகினார் பாரதியார். இப்படியாக, தெய்வத்தை உறவாகக் கருதி வழிபட்டனர்.
இதே போன்று கேரளத்தில், கடவுளை அப்பூப்பன் அல்லது அப்பப்பன் என பெயர் சூட்டி வழிபடுகின்றனர், பக்தர்கள். அப்பூப்பன் என்றால் ‘தாத்தா’
சாஸ்தா என்றாலே நம்க்குக் கேரளத்தின் நினைவுதான் வரும். சபரிமலை, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை, பந்தளம் என பல இடங்களில், பிரபலமான சாஸ்தா கோவில்கள் உள்ளன. உலகிலேயே சாஸ்தாவின் பிறப்பு மட்டுமே அபரிமிதமானது. இயற்கை விதியை மீறி அவதரித்தவர், சாஸ்தா. ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறந்தவர்களே பூமியில் உண்டு. இவரோ, சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் என இரு ஆண்களுக்குப் பிறந்தவர். தனக்கு, சிவன் தந்தை, விஷ்ணு தாயார் என்றால், விஷ்ணுவின் மனைவியான, லட்சுமி தனக்கு என்ன உறவு வேண்டும் என குழம்பியவர்.
அப்பாவுக்கு மனைவி, பார்வதி. அம்மாவுக்கு மனைவி லட்சுமி...பார்வதியை அம்மா என அழைப்பதில் எந்த தடையும் இல்லை. ஆனால், அம்மாவின் மனைவியை எப்படி அழைப்பது என நாடியில் கை வைத்தபடி, யோசித்தாராம். இந்த அதிசயத்தை ஒரு சிற்பி சிலையாகவே வடித்து, சோழ நாட்டிலுள்ள கோவில் ஒன்றில் இருந்ததாக, காஞ்சி மகாபெரியவர் சொல்லியுள்ளார். தற்போது, அந்த சிலை எங்கும் காணப்படவில்லை. ஆன்மிக ஆர்வலர்கள், இப்படி ஒரு சிலை அமைக்க இப்போது முயற்சிக்கலாம்.
இப்படி, வித்தியாசமாக பிறந்த சாஸ்தாவின் உடலில் நிரந்தரமாகத் தங்க விரும்பினார், சிவன். அவரது உடலில், லிங்க வடிவில் நிரந்தரமாகத் தங்கி விட்டார். சிவனும், சாஸ்தாவும் இணைந்த இந்த வடிவம், தெய்வங்களிலேயே முதுமையானதாக கருதப்படுகிறது. இதனால் அப்பூப்பன் (தாத்தா) என செல்லப் பெயரிட்டும், ‘இன்டலையப்பன்’ எனப் பெயர் சூட்டியும், பேச்சு வழக்கில், ‘இன்டலியப்பன்’ என்றும் கூறினர். இன்டலியப்பன் என்றால் முதுமையானவர் என பொருள்.
திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆற்றிங்கல் (ஆற்றுக்கால்) என்னும் ஊரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஆவணஞ்சேரி இன்டலியப்பன் கோவில் உள்ளது. ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில், இன்டலியப்பனுக்கு சன்னிதி உள்ளது. இதிலிருந்து, இன்டலியப்பன் வழிபாடு எந்த அளவு முதுமையானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், இவரைத் தங்கள் தாத்தாவாக கருதுகின்றனர், கேரள பக்தர்கள். நல்ல உடல்நிலை, சுறுசுறுப்பு, செல்வ வளமிக்க வாழ்க்கை ஆகிய கோரிக்கைகளுக்காக இன்டலியப்பனை வழிபடுவர்.
அப்புறமென்ன, தாத்தாவிடம் ஆசி பெற, கேரளம் நோக்கிச் செல்வோமா!