நேபாளத்தில் இரண்டு மலைகளுக்கு இடையில் இருக்கும் பள்ளத்தாக்கு 'கண்டக்' எனப்படும். அங்கு உற்பத்தியாகும் நதி 'கண்டகி' என்று அழைக்கப்படுகிறது. கண்டகி நதியில் மட்டுமே சாளக்கிராம மூர்த்தங்கள் கிடைக்கின்றன. ஒரு வகைப் பூச்சியின் ஓடு கெட்டிப்பட்டு சாளக்கிராமமாக மாறுகிறது என்றும், கூழாங்கல் போன்ற ஒரு வகைக் கற்களே சாளக்கிராமம் என்றும் இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன.
சாளக்கிராமம் பெலம்நைட் ஆர்த்தோ ஸெராடைட் ஆகியவற்றால் உருவான அம்மோனைட் என்ற வகையைச் சார்ந்தது என்பது கனிமவியலார் கருத்து. ஸாலம் (ஆச்சா மரம்) நிறைந்த இடத்தில் இருப்பது ஸாலக்ராம தீர்த்தம். அந்த ஸாலம் என்ற சொல்லிலிருந்தே 'சாளக்ராமம்' என்ற வார்த்தை உருப்பெற்றது என்பர்.
பிரியம்வதை என்ற பெண் விதேக நாட்டைச் சேர்ந்தவள். அவள் திருமாலை நோக்கித் தவம் புரிந்தாள். அவளுக்குத் திருமால் மனித உருவில் காட்சி கொடுத்தார். பெருமாள் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென்று பிரியம்வதை வரம் கேட்டாள். பிரியம்வதை அடுத்தப் பிறவியில் நேபாளத்தில் கண்டகி நதியாகத் தோன்றுவாள் என்றும், அந்த நதியில் தமது அம்சமான பல்வேறு சாளக்கிராம மூர்த்தங்கள் உற்பத்தியாகும் என்றும் திருமால் வரம் கொடுத்தார். அதன்படி கண்டகி நதியும் அதனிடையே சாளக்கிராமங்களும் தோன்றின என்கிற புராணக்கதைகளும் இருக்கின்றன.
பூஜைக்குரிய சாளக்கிராமங்களை அவற்றின் வடிவம், புள்ளிகள், ரேகைகள் போன்ற அம்சங்களைக் கொண்டு தேர்த்தெடுக்கலாம். இப்படி, சாளக்கிராமங்களில் பல மூர்த்தங்கள் இருக்கின்றன. அவை;
1. மத்ஸ்ய மூர்த்தம் - மீன் வடிவம்
2. கூர்ம மூர்த்தம் - ஆமை வடிவம்
3. வராக மூர்த்தம் - பன்றி வடிவம்
4. நரசிம்ம மூர்த்தம்
5. வாமன மூர்த்தம்
6. திரிவிக்கிரம மூர்த்தம்
7. பரசுராம மூர்த்தம்
8. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தம்
9. ஸ்ரீபலராம மூர்த்தம்
10. ஸ்ரீகிருஷ்ண மூர்த்தம்
11. கோபால மூர்த்தம்
12. வேணுகோபால மூர்த்தம்
13. சந்தான கோபால மூர்த்தம்
14. கல்கி மூர்த்தம்
15. ஹயக்கிரீவ மூர்த்தம்
16. பிரத்யும்ன மூர்த்தம்
17. ஸ்ரீதர மூர்த்தம்
18. ஸ்ரீபத்மநாப மூர்த்தம்
19. ஸ்ரீஅனந்த மூர்த்தம்
20. ஸ்ரீலட்சுமிநாராயண மூர்த்தம்
21. ஸ்ரீநாராயண மூர்த்தம்
22. ரிஷிகேச மூர்த்தம்
23. தாமோதர மூர்த்தம்
24. உபேந்திர மூர்த்தம்
25. ஜனார்த்தன மூர்த்தம்
26. வாசுதேவ மூர்த்தம்
27. அச்சுத மூர்த்தம்
28. சிவதாப மூர்த்தம்
29. ஹிரண்யகர்ப்ப மூர்த்தம்
30. மதுசூதன மூர்த்தம்
31. சுதர்சன மூர்த்தம்
சாளக்கிராமத்தின் மேல் காணப்படும் சின்னங்களைப் பார்த்து அது என்ன மூர்த்தம் என்று அறியலாம்.
உதாரணமாக, வில் - அம்பு சின்னம் இருந்தால் அது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தமாகும். வேணுகோபால மூர்த்தமானால் அதன் மீது புல்லாங்குழல் வடிவம் காணப்படும்.
கருப்பு நிறத்துடன், இடப்பக்கத்தில் சக்கரத்துடன், பொட்டுக்கள், புள்ளிகள் காணப்படும் சாளக்கிராமம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம மூர்த்தம் எனப்படும். இது இகபர சௌபாக்கியங்களை அளிக்க வல்லது. ஆதலால் இல்லற வாழ்க்கையில் இருப்பவர்கள் பூஜிக்கலாம். அவ்வாறே நீண்ட முகமும், பெரிய வயிற்றுப் பாகமும் கோரைப்பல் போன்ற கோடுகளும் உடைய சாளக்கிராமம் ஸ்ரீநரசிம்ம மூர்த்தமாகும். இதனைத் துறவிகளும், பிரம்மச்சாரிகளும் வழிபடலாம்.
சிகப்புக் கோடுகள் உள்ள சந்தான கோபால மூர்த்தம் மக்கட்பேறு அளிக்க வல்லது.
செம்பருத்தி நிறத்துடன் வனமாலை, வில், அம்பு ஆகியவற்றுடன் திகழும் பிரத்யும்ன மூர்த்தம் இஷ்ட காரிய சித்திகளை அளிக்கும்.
சியாமள நிறம் உடைய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தம் உடல் வலிமையை அளிக்கும் என்பர்.
பூஜை நெறிகளில் அனுபவம் பெற்ற சான்றோர்களின் ஆலோசனை பெற்று வழிபாட்டு மூர்த்தங்களைத் தேர்ந்தெடுத்தலே நன்மை தரும்.