'மாதா பிதா குரு தெய்வம்' எனும் சொற்றொடர் தெரியும். இதன் முழுமையான பொருள் தெரியுமா?
1. தாய்
மகனுக்குத் தாயே முதல் தெய்வம். கண்கண்ட தெய்வம். மகனைச் சுமந்து, பெற்றெடுத்து வளர்க்கின்ற முழுப்பொறுப்பும், கடமையும் இவளுக்கே உரியன. இவளே, தந்தை என்ற இரண்டாம் தெய்வத்தைச் சுட்டிக் காட்டுகின்றாள்.
2. தந்தை
பெற்ற தாய் மகிழும்படி மகனைக் கற்ற சான்றோனாக உயர்த்துகின்றார் தந்தை. இது இவருக்கு விதிக்கப்பட்ட கடமை. இவர் மகனுக்கு அறிவுறுத்துகின்ற அறிவுரைகள் ஓராயிரம். உபதேசிக்கின்ற அறிவுரைகள் மற்றோர் ஆயிரம். ஒரு நல்ல வாழ்வியல் வழியைத் தெரிவு செய்து, அதில் மகன் இடறி விழாமல் தொடர்ந்து நடந்து செல்ல ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்ற முன்னோடியே தந்தை ஆவார். ஆகவே, இரண்டாம் தெய்வமான தந்தை மகனுக்கு முதல் குருவாகத் திகழ்கின்றார். இந்த உண்மை பலருக்குத் தெரிவதில்லை.
கல்வியை ஆழமாகவும், அகலமாகவும் கற்றல், அதை மாணவர்களுக்குக் கற்பித்தல் ஆகிய இரண்டு முக்கியத் தகுதிகள் ஒரு குருவுக்கு மிகவும் தேவை. கற்றல் - கற்பித்தல் என்ற இரண்டு தகுதிகள் முதல் குருவான தந்தைக்கு இல்லாத போது, தந்தை இத்தகுதிகள் நிறைந்த ஒரு குருவைத் தேடி, தேர்ந்தெடுத்து இவரிடம் கல்வி கற்கத் தம் மகனை ஒப்படைக்கின்றார். இக்குருவுக்கு ''வித்யா குரு" என்பது பெயர். மகனைச் சான்றோன் ஆக்குகின்ற பொறுப்பு இப்போது வித்யா குருவைச் சார்கின்றது. இக்குரு ஒரு மகனுக்கு மூன்றாம் தெய்வம்.
3. குரு
வித்யா குரு, ஞான குரு, பிரம குரு என்று மொத்தம் மூன்று குருக்கள் ஆவர். முதல் இரு குருக்களால் சீடரது மனம் படிப்படியாகப் பக்குவப்படுகிறது; தூய்மையாகிறது. மேலும் இவர்கள் சீடரது ஆன்மாவைத் தெய்வத்திடம் - பரம்பொருளிடம் ஆற்றுப்படுத்துகின்றனர். பிரம குருவாக எழுந்தருளுகின்ற தெய்வம் பக்குவப்பட்ட ஆன்மாவுக்கு வீடுபேறு அளிக்கின்றார். வாழ்வியல் வட்டம் பூர்த்தியாகிறது.
4. தெய்வம்
பக்குவப்படாத ஆன்மாக்கள் வேறொரு தாயின் வயிற்றில் மறுபிறவி எடுக்குமாறு தெய்வத்தின் ஆணை பிறக்கின்றது. வாழ்வியல் வட்டம் மீண்டும் சுழல்கிறது.
மாதா - பிதா - குரு - தெய்வம் என்ற நால்வரில், பிதா, குரு, தெய்வம் ஆகியோர் மூவரும் மரியாதைக்குரிய, மேன்மையான குருக்கள் ஆவர். ஆகவே, 'குரு' என்ற சொல்லுக்குத் 1. தந்தை, 2. குரு, 3. தெய்வம் ஆகிய மூன்று அர்த்தங்கள் அமைத்தன. பொதுவாக, தாயை ஒரு குருவாக ஏற்பது இல்லை; அவ்வாறு ஏற்றாலும், அது சிறுபான்மை எனலாம்.