சித்ரா பெளர்ணமி
சாந்திராயண பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இந்து சமயம் சார்ந்த வருடத்தின் பன்னிரண்டு மாதங்கள் அமைந்துள்ளன.
அந்தந்த மாதத்தில் பௌர்ணமியன்று உச்சத்தில் இருக்கும் நட்சத்திரத்தை ஒட்டி மாதங்கள் பெயரிடப்பட்டிருக்கின்றன.
சித்திரை மாதத்தின் பௌர்ணமி, அதாவது சித்திரை நட்சத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் பௌர்ணமியானது, இந்து கடவுளரின் கணிக்கும் தேவதைகளான சித்திரகுப்தர்களுக்கு மிகவும் புனிதமானதாகும்.
அன்றைய தினம் மரணதேவனின் தேவலோகப் பிரதிநிதிகளான சித்திரகுப்தர்களுக்குச் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வாசனைப் பொருள்கள் கலந்த சாதம் தயாரிக்கப்பட்டு, பிறகு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.
இந்தச் சடங்கு வழிபாட்டின் இறுதியில் அக்கினி வழிபாடு செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தச் சமயச் சடங்குகளால் இந்த மேலுலக தேவதைகள் பெரிதும் திருப்தி அடைந்து, மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.
பன்னிரண்டு மாதங்களில் முதலாவது மாதம் சைத்திர என்ற சித்திரை மாதமாகும்.
ஒவ்வொரு வருடத்தின் முதலாவது பௌர்ணமியன்று செய்யப்படும் இந்த வழிபாட்டின் மானசீகமான பலன், இந்தப் பூவுலகில் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் இடைவிடாமல் கண்காணிக்கும் ஒரு மேலான சக்தி இருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுவதாகும்.
ஒருவரது நடத்தையை, மறைந்துள்ள ஒரு சக்தி கண்காணிக்கிறது என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
ஒவ்வொருவர் தோளிலும் சித்திரகுப்தர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் - நாம் எப்போதும் நல்ல செயல்களையே செய்ய வேண்டும் என்று தூண்டுவதற்காகத்தான்.
'சித்திரகுப்த' என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு, 'மறைந்துள்ள படம்' என்பது பொருள்.
நமது நல்ல, தீய செயல்களின் உண்மையான படம் சூட்சுமமான ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழிபாட்டிற்காக இந்து ஒருவன் அதற்கு உருவம் கொடுக்கிறான்.
சித்திரகுப்தர்களை வழிபடுவதன் உட்பொருள், அதனுடன் தொடர்புடைய பின்வரும் கதையில் அழகாக விளக்கப்படுகிறது.
தேவர்களின் தலைவனான இந்திரனின் குரு பிருஹஸ்பதி. ஒரு சமயம் இந்திரன் பிருஹஸ்பதியை அவமதித்துவிட்டான்.
அதன் விளைவாக எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது என்று இந்திரனுக்கு அறிவுரை கூறுவதை பிருஹஸ்பதி நிறுத்திவிட்டார்.
குரு இல்லாத சமயத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாததால், இந்திரன் பல தீய செயல்களைச் செய்தான். கருணை மிகுந்த குரு மீண்டும் தமது பணியைத் தொடங்கிய சமயத்தில் “குரு இல்லாத சமயம், தான் செய்த தவறுகளுக்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும்?" என்று கேட்டான் இந்திரன்.
''ஒரு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும்'' என்று பிருஹஸ்பதி பதில் கூறினார்.
தனது தீர்த்தயாத்திரையின் போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனது தோள்களிலிருந்து பாவச்சுமை அகற்றப்பட்டது போல் இந்திரன் உணர்ந்தான்.
அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான்.
தன்னிடமிருந்து பாவங்கள் விலகிய அதிசயம் அங்கே இருந்த சிவலிங்கத்தால்தான் நிகழ்ந்தது என்று அவன் கருதி அதற்கு ஒரு கோவில் கட்ட விரும்பினான்.
உடனடியாக கோவிலையும் கட்டினான்.
இப்போது அவன் சிவலிங்கத்தைப் பூஜிக்க விரும்பினான்.
அருகிலிருந்த ஒரு குளத்தில் இறைவனே பொற்றாமரைகளைத் தோன்றச் செய்தார்.
இந்திரன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.
அவன் ஆசீர்வதிக்கப்பட்டான்.
அவன் அவ்வாறு வழிபட்ட நாள்தான் சித்திரா பௌர்ணமி.
நீங்கள் சித்திரா பௌர்ணமியன்று வழிபாடு செய்யும்போது இந்தக் கதையை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களிடம் ஆழ்ந்த சிரத்தை இருக்குமானால், அறியாமையின் காரணமாக நீங்கள் பாவம் செய்து விட்டீர்கள் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்து வருந்துவீர்களானால், உங்கள் பாவங்களை மன்னிக்க பக்தி சிரத்தையுடன் நீங்கள் இறைவனை வழிபடுவீர்களானால், அவற்றை மீண்டும் எதிர்காலத்தில் செய்யமாட்டீர்கள் என்று உறுதி கொள்வீர்களானால், உங்கள் குருவிடம் பணிவு கொண்டு அவரது அறிவுரைகளை ஒருபொழுதும் மீற மாட்டீர்கள் என்று உறுதி எடுப்பீர்களானால், அப்போது உங்களது பாவங்கள் மன்னிக்கப்படும்.
இதுவே மேற்காணும் இந்திரன் கதையின் உட்பொருளாகும்.
சித்திரா பௌர்ணமியன்று இந்தக் கதையைத் தியானியுங்கள்.
இந்த நாளில் விரிவான வழிபாடுகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இந்து பூஜை வழிபாட்டு நூல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கலசம் அல்லது விக்கிரகத்தில் தேவதை ஆவாஹனம் செய்யப்பட்டு, எல்லாச் சடங்குகளுடன் வழிபடப்பட்டு, அந்தக் கடவுள் விக்கிரகத்திற்குப் பூஜை செய்யப்படுகிறது.
கீழ்க்காணும் சுலோகத்தைச் சொல்லியபடியே சித்திரகுப்தரை தியானித்து, பலன்களைப் பெறுங்கள்
“சித்திர குப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகனீபத்ர தாரிணம் |
சித்ர ரத்னாம்பரதாரம்
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம் // ”
பிறகு தீபம், தூபம், பூக்கள் போன்றவற்றுடன் உரிய வழிபாடு செய்யுங்கள். ஏழை, எளியவர்களுக்கும், பெரியோர்களுக்கும் உணவு அளியுங்கள்.
தாராளமாக தானம் செய்து இறைவனின் அருளைப் பெறுங்கள்.
சுவாமி சிவானந்தர் எழுதிய 'ஹிந்து விரதங்களும் விழாக்களும்' எனும் நூலிலிருந்து
உ. தாமரைச்செல்வி
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.