ஸ்ரீராமரைக் காட்டிற்கு அனுப்பியதில் பரதனுக்கும் பங்கு உண்டு என்ற குற்றச்சாட்டை மறுத்த பரதன், கௌசல்யா மற்றும் சுமித்திரையை வணங்கி, கபடமில்லாமல் சொன்னான்;
‘அம்மா, ஸ்ரீராமரைக் காட்டிற்கு அனுப்பியதில் என் சம்மதம் இருந்தது என்றால் மாதா, பிதா, புத்திரனைக் கொன்ற பாவம், பசுக்கள், பிராமணர்களைக் கொளுத்திய பாவம், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்ற பாவம், நண்பனுக்கு, ராஜாவுக்கு விஷம் தந்த பாவம், என்னென்ன பாதகங்களும், மனம், சொல், உடலாலும் செய்யப்படுவதாக கவிகளால் கூறப்படுகிறதோ, அந்த எல்லாப் பாவங்களும் எனக்கு வந்து சேரட்டும்...”
அம்மா, ராமரைக் காட்டிற்கு அனுப்பிய சதியில் என் சம்மதம் இருந்தது என்றால்,
“வேதத்தை விற்றவன், தர்மத்தை மறந்தவன், கோள் சொல்பவன், பிறர் பாவத்தை வாயால் சொல்பவன், கபடன், நயவஞ்சகன், சண்டைக்காரன், கோபக்காரன், வேதத்தை இகழ்பவன், உலகுக்கெலாம் பகைவன், லோபி, காம வெறியன், பேராசைக்கு அடிமையானவன், பிறர் செல்வம் மற்றும் பிறர் மனைவி மீது கண்ணாக இருப்பவன் ஆக்யோர்களின் கதியை நான் அடைவேனாக...”
அம்மா, ராமரைக் காட்டிற்கு அனுப்பும் சதி எனக்கு முன்பே தெரியும் என்றால்,
“சாதுசங்கத்தில் பிரேமை கொள்ளாதவன், பரமார்த்த வழியை விட்டு எதிராகப் போகும் அபாக்கியவான், மனித உடல் பெற்றும் பகவானைப் போற்றாதவன், ஹரிஹரனின் புகழ் பிடிக்காதவன், வேத மார்க்கம் விட்டு வாம மார்க்கம் போகிறவன், ஏமாற்றுகிறவன், வேடமிட்டு ஏய்ப்பவன் ஆகியோர்களின் கதியை எனக்கு சங்கரன் தருவாராக”
பரதனின் எளிய சுபாவத்தையும், சத்தியமான பேச்சையும் கேட்டு அன்னையர் இருவரும்,
‘குழந்தாய், நீ மனதால், வாக்கால், கர்மாவால், ராமப்பிரியன். நீ ரகுபதிக்கு பிராணனைவிடப் பிரியன், ராமன் உனக்குப் பிராணனுக்கும் பிராணன். சந்திரனிலிருந்து விஷம் கசியட்டும், பனிக்கட்டியிலிருந்து தீ உண்டாகட்டும், நீரில் வாழ்வன நீரைத் துறக்கட்டும், ஞானம் உண்டான பின்பும் மோகம் அழியாதிருக்கட்டும், (என்றாலும்) நீ ராமனுக்கு எதிரியாக மாட்டாய். பரதா, ராமனைக் காட்டிற்கு அனுப்பியதில் உனக்குச் சம்மதம் இருந்தது என்று யாராவது சொன்னால், அவனுக்குச் சுகமோ, நல்ல புத்தியோ கனவிலும் கிடைக்காது”
என்று சொல்லிவிட்டு இருவரும் பரதனைப் பாசத்துடன் அணைத்துக் கொண்டனர்.