ராமாயணம் என்ற சொல்லுக்கு, 'ராமன் வழி' என்று பொருள் கொள்ளல் வேண்டும். வால்மீகி, கம்பர் ஆகியோர் முறையே வடமொழியிலும் தமிழிலும் இயற்றிய ராமாயணம் உலகக் காப்பியங்களுள் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றன. இவ்வேளையில் ராமனை மையமாகக் கொண்டு தோன்றியிருக்கும் மேலும் சில ராமாயணங்களை அறிந்து கொள்ளலாமா?.
1. ஆதிகால ராமாயணங்கள்
ராமனுடைய காலத்திலேயே பல அருளாளர்கள் அவன் சரிதத்தைச் செய்ததாகத் தெரிகிறது. ஆனால் சியவனர், போதாயனர், பரத்துவாசர் முதலியவர்கள் செய்த ராமாயணம் இப்போது முழுமையாகக் கிடைக்கவில்லை. வால்மீகி ராமாயணத்தின் வெளிப்பாட்டால், அவை மறைந்திருக்கலாம்.
2. ஆனந்த ராமாயணம்
இது 9 காண்டங்களையும், 109 சருக்கங்களையும் 12,252 பாடல்களையுமுடைய வடமொழி நூல். இதில் சார காண்டத்தில் வால்மீகி ராமாயணம் சுருக்கிச் சொல்லப்படுகிறது. யாத்ரா காண்டத்தில் ராமனின் தீர்த்த யாத்திரை சொல்லப்படுகிறது. யாக காண்டத்தில் ராமன் செய்த 108 அசுவ மேத யாகங்கள் கூறப்பெறுகின்றன. இதில் ராமனுடைய பூசை, உபாசனை பற்றிய விதிகள், ராமநாமம் செய்த விரதப் பூர்த்தி; அனுமன், சீதை, இலக்குவன், பரதன், சத்துருக்கனன் ஆகியோரை வணங்கத் தேவையான கவசநூல்களும் உள்ளன. எனவே இது சதகோடி ராமயணத்தின் ஒரு பகுதி என்றே அழைக்கப்படுகிறது.
3. அத்யாத்ம ராமாயணம்
இது பிரம்மாண்ட புராணத்தில் அடங்கிய பகுதி. ராமானந்த சுவாமிகள் பரமசிவன் வரத்தாலும், கிருஷ்ண சைதன்யர் என்பவரின் கட்டளையாலும் இதனைச் செய்தார் என்று தெரிகிறது. வால்மீகி சொல்லாத பல உள்ளுறைப் பொருள்கள் இதில் கூறப்பெற்றிருக்கின்றன.
4. அற்புத ராமாயணம்
இது வால்மீகியால் பரத்துவாசன் என்ற சீடனுக்கு உபதேசிக்கப் பெற்றுள்ளதாக அமைந்துள்ளது. 27 அத்தியாயங்களைக் கொண்டது. இதில் ஆஞ்சனேயருக்கு ராமன் செய்த உபதேசம் ஒரு முக்கியப் பகுதி.
5. அக்னிவேசிய ராமாயணம்
ராமாயணத்தின் முக்கியமான செய்திகளை வருடம், மாதம், திதி ஆகிய குறிப்புக்களுடன் பஞ்சாங்க ரூபமாக சொல்லும் நூல்.
6. ஸங்க்ரஹ ராமாயணம்
வால்மீகி ராமாயணத்தையொட்டி நாராயண பண்டிதரால் செய்யப் பெற்றது.
7. யோகவாசிஷ்ட ராமாயணம்
இதற்கு வேறு பெயர் ஞானவாசிட்டம். தத்துவ உபதேசங்களும், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற அறுவகை உட்பகைகளை நீக்கும் முறையும் இதில் கூறப்பெறுவது மிகச் சிறப்பானது.
8. ஸ்ரீதர ராமாயணம்
பாகவதத்திற்கு உரைசெய்த ஸ்ரீதர சுவாமிகளே இதன் ஆசிரியர். வேறு எந்த ராமாயண ஆசிரியராலும் சொல்லப்படாத, கர்ண பரம்பரையாகக் கருதப்பெறும் கதைகள் பல உள்ளன. இதனை சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் பெரிதும் போற்றியுள்ளார்.
9. மந்திர ராமாயணம்
லட்சுமணார்யர் என்பவரால் செய்யப்பட்டது. ராமாயண சம்பவங்களுக்கு ஏற்ப மந்திரங்களுக்கு விரிவுரை செய்யப்பட்டுள்ளது.
10. ரகுவம்சம்
காளிதாசன் இயற்றியது. 19 சருக்கங்களுடன் திடீரென முடிந்து விடுகிறது. சூரியவம்சப் பேரரசர்களின் வரலாறுகள் கூறப்பெறுகின்றன. இதில் உள்ள பல அம்சங்கள் வால்மீகி ராமாயணத்தில் இல்லை. முன்னிருந்த சான்றோர் பலர் மொழிந்த கதையை அடிப்படையாகக் கொண்டே தாம் இதை இயற்றியிருப்பதாகக் காளிதாசரே தெளிவுறக் கூறுகிறார்.
11. பட்டிகாவியம்
இது ராவணவதத்தைக் குறிப்பது. வலபி என்ற நகரத்தில் இருந்த தரசேனன் என்பானது அவைக் களத்தில் பட்டிகவி என்பவரால் இயற்றப் பெற்றது.
12. ராமநாடகம்
தமிழகத்தில் 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அருணாசலக் கவிராயரால் இயற்றப் பெற்றது. தரு, திபதை, கண்ணி, விருத்தம், ஓரடி, கீர்த்தனை எனப் பலவகைப் பாவினங்களால் ஆனது. மிக எளிய மக்களுக்கும் புரியுமாறு தமிழ்மொழியில் செய்யப்பெற்ற இந்த நாடகம் தமிழகத்தில் மிகப் பிரபலமானது.
13. பாஸ்கர ராமாயணம்
இது தெலுங்கு மொழியில் பாஸ்கரக் கவியால் இயற்றப் பெற்றது. அரிய கற்பனைகளும், விருத்தங்களும், சொல் சேர்க்கையும் உடையது. இதில் உள்ள சில கடினமான சொல் பயன்பாடுகள் புலவரால் பெரிதும் விவாதிக்கப்பெறுவன.
14. துளசிதாசர் ராமாயணம்
இதற்கு வேறு பெயர் ராமசரிதமானஸம் என்பது. இது புசுண்ட மகரிஷியால் கருடனுக்கும் யாக்ஞவல்கியருக்கும் சொல்லப்பெற்றது. யாக்ஞவல்கியருடைய சீடர் பரம்பரையைச் சார்ந்த துளசிதாசர் என்பவரே இதனைக் காவிய வடிவில் தந்தார். இவர் காலம் கி.பி. 1575-1624. ஹஸ்தினாபுரத்தில் பிறந்து காசியில் வளர்ந்தவர். இது ஹிந்தி மொழியில் ஏழு காண்டங்களைக் கொண்டதாக உள்ளது.
15. ஜைன ராமாயணம்
ஹேமசந்திராசார்யர் என்ற ஜைனகவி இயற்றியது. இது மாகதி மொழியில் இயற்ற பெற்றது. குடந்தை நகர் பாரதாசாரியார் இதனை வெகு காலத்திற்கு பின்பு வட மொழியில் மொழிபெயர்த்தார். தமிழிலும் வெளிவந்துள்ளது.
16. பௌத்த ராமாயணம்
புத்தரால் அருளச் செய்யப்பெற்ற தம்மபதம் என்ற நீதிநூலுக்குப் புத்தகோஷர் என்பவர் இயற்றிய உரையிலும், மகாவம்ச சரிதத்திலும், புத்தருடைய முற்பிறவிக் கதைகளில் ஒன்றான தசரதஜாதகக் கதையிலும் உள்ள குறிப்புக்கள் இதில் உள்ளன.
17. மொல்ல ராமாயணம்
ஆந்திரத்தைச் சேர்ந்த பெண்பாற்புலவரான மொல்ல என்பவரால் இயற்றப் பெற்றது.
18. பாசுரப்படி ராமாயணம்
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் காணும் ஆழ்வார்கள் பாசுரத்தினின்றும் ராமாயணத் தொடர்பான வரிகளை எடுத்துத் தொகுத்துப் பெரியவாச்சான்பிள்ளை என்பவரால் தரப்பெற்றது. பத்து நிமிடங்களுள் முழுமையாக ராமாயணத்தை அழகு தமிழில் கற்க இதுவே சிறந்த நூல். 800 ஆண்டுகளுக்கு முன்பு குடந்தைக்கு அண்மையிலுள்ள திருச்சேய்ஞலூர் என்ற இடத்தில் பிறந்த ஸ்ரீகிருஷ்ணபாதர் என்பவரே பெரியவாச்சான்பிள்ளை எனப்பெறுபவர். ஆழ்வார்கள் பாசுரங்கள் அனைத்துக்கும் உரை இயற்றி 'வியாக்யான சக்கரவர்த்தி' என்று புகழ் பெற்றவர். இதனை நித்திய பாராயணம் செய்தால் நினைத்த செயல் கைகூடும்.