மலைக்கோவில்களுக்கு செல்வதற்கு முழுநிலவு நாளையே பக்தர்கள் தேர்வு செய்கின்றனர். அன்று சந்திரம் முழு ஒளியுடன் இருப்பார். குறிப்பாக, சித்திரை முழுநிலவு நாளன்று சந்திரன் கூடுதல் சக்தியுடன் ஒளிர்வார். அதனால்தான் அந்த நாளைத் தேர்ந்தெடுத்து விழாக்கள் நடத்தப்படுகின்றன.
நவக்கிரகங்களில் சந்திரன் மனபலம் தருபவர். ஜோதிடத்தில் அவரை மனோகாரகன் என்பர். மன பலம் கிடைத்து விட்டால், எதிலும் வெற்றிதான். எனவே, அந்நாளில் மலைக்கோவில்களில் மலை வலம் வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலையில் மலை வலத்திற்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகின்றனர். சித்திரை முழு நிலவு நாளிலான மலை வளம் சிறப்பு மிக்கதாக இருக்கிறது.
சிவன், முருகன், பெருமாள், அம்பாள் என பல தெய்வங்கள் மலையில் குடி கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு மலையே சிவனாக இருக்கிறது என்றால் அதுதான் அண்ணாமலை. ‘அண்ணா’ என்றால் ‘மிக உயர்ந்த’ என பொருள். அண்ணாந்து பார்க்க வைக்க வைக்கும் மலை என்பதால், இதற்கு இப்படி ஒரு பெயர். அத்துடன் மரியாதை நிமித்தமாக ‘திரு’ சேர்த்து, ‘திருவண்ணாமலை’ ஆயிற்று. இங்கே அண்ணாமலையாரும், அபிதகுஜாம்பிகை என்னும் உண்ணாமுலை அம்மனும் இருந்து அருள் புரிகின்றனர். தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலை வற்றாமல் வழங்குவது போல், இந்த அம்பாள் வற்றாத அருளை உலக உயிர்களுக்கு அருள்பவள். இதனால் ‘உண்ணாமுலை’ என்று இவளுக்குப் பெயர். எவ்வளவு கேட்டாலும் வரம் தரும் இயல்புள்ளவள் எனறு இதற்குப் பொருள்.
திருவண்ணாமலை 2748 அடி உயரம் கொண்டது. இதை ஒரு முறை சுற்றி வர 14 கிலோ மீட்டர் தொலைவினைக் கடக்க வேண்டும். புவியியல் அமைப்பின்படி இந்த மலை தோன்றி 260 கோடி ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். தொடக்கத்தில் நெருப்பைக் கக்கி வந்த இந்த நெருப்பு மலை, இப்போது சிவனின் மனம் போல் குளிர்ந்து, அனைவரையும் அருகில் நெருங்க அனுமதிக்கிறது.
அண்ணாமலையார் கோயில் 24 ஏக்கர்(10 லட்சத்து 67ஆயிரத்து 993 சதுர அடி) பரப்பளவு உடையது. இங்கு ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கிழக்கிலுள்ள ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டது. 11 நிலைகள் உள்ளன. வடக்கிலுள்ள அம்மணி அம்மன் கோபுரம் 171 அடி, மேற்கிலுள்ள பேய்க்கோபுரம் 160 அடி, வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் ஆகியவை 81 அடி, தெற்கு, மேற்கு கட்டை கோபுரங்கள் 70 அடி, வடக்கு கட்டை கோபுரம் 45 அடி உயரம் கொண்டவை.
இங்கு திருக்கார்த்திகை மற்றும் சி்த்திரை முழு நிலவு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கார்த்திகை அன்று மலை உச்சியில் தீபமேற்றுவர். பிரம்மாவுக்கும், பெருமாளுக்கும் அண்ணாமலையார் நெருப்பு மலையாக காட்சி தந்ததன் அடிப்படையில் இந்த விழா நடத்தப்படுகிறது.
இங்கு தீபமேற்றும் வழக்கம் வந்த வரலாறு சுவையானது.
பிரம்மாவுக்கும், பெருமாளுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. அவர்கள் சிவனை அணுகினர். அவர் மலை போன்ற நெருப்பு வடிவாக வானத்துக்கும் பூமிக்கும் உயர்ந்து நின்றார். பிரம்மாவைத் தனது உச்சியையும், பெருமாளைத் தனது பாதத்தையும் பார்த்து வரும்படி அனுப்பினார். இருவரும் களமிறங்கினர். இருவராலும் அதைச் செய்ய முடியவில்லை. பெருமாள் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்மாவோ முடியைக் கண்டுவிட்டதாக பொய் சொன்னார். அதனால் அவருக்கு பூமியில் பூஜை கிடையாது என்ற தண்டனையைப் பெற்றார். சிவனின் நெருப்பு வடிவம் குளிர்ந்து மலையாக மாறி விட்டது. இதுவே அண்ணாமலை ஆயிற்று.
‘அண்ணா’ என்னும் சொல்லுக்கு ‘நெருங்க முடியாத’ என்ற பொருளும் உண்டு. அது நெருப்பு மலை என்பதால், யாராலும் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. கலியுகத்தில் நம் மீது அன்பு கொண்டு, மலையாய் இருக்கும் சிவன் குளிர்ந்து நம்மை அருகில் வர அனுமதிக்கிறார் என்பர்.
இவ்வூரில் வசித்த சிவனடியார் ஒருவர், கணம்புல் கொண்டு இந்த கோயிலில் தீபமேற்றி வந்தார். ஒருமுறை கணம்புல்லுக்கு தட்டுப்பாடு ஏற்படவே, சற்றும் யோசிக்காமல் தனது முடியை அறுத்து திரியாக்கி தீபமேற்ற முயன்றார். அப்போது சிவனும், பார்வதியும் அங்கு தோன்றி அவரைத் தடுத்து ஆட்கொண்டனர். அவரது மனதிடத்தையும் சேவையையும் பாராட்டினர். நாயன்மார்களில் ஒருவரான அவர் கணம்புல் கொண்டு விளக்கேற்றியதால், கணம்புல்லர் என பெயர் பெற்றார். அவர் கணம்புல்லால் அன்று விளக்கேற்றியது போல, இன்று காடாத்துணி கொண்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்றுகின்றனர்.
திருவண்ணாமலை மலை வலப் பாதையில் அஷ்ட லிங்கம் எனப்படும் எட்டு லிங்கக் கோயில்கள் உள்ளன. முதலில் இந்திரலிங்கத்தை வணங்கி விட்டு மலைவலத்தைத் தொடங்க வேண்டும். தொடர்ந்து அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் தரிசனம் முடித்து, சுடுகாட்டிலுள்ள ஈசானலிங்கக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். மனிதன் என்னதான் சம்பாதித்தாலும், கடவுளிடம் என்ன வேண்டினாலும், மரணம் ஒன்றே உண்மையானது என்ற தத்துவத்தை இங்கே உணரலாம். அடுத்து அண்ணாமலையார் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வதுடன் அண்ணாமலை தரிசனம் நிறைவடையும். கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலை, நேர் அண்ணாமலை கோயில்களும் உள்ளன.
சித்திரை மாதத்தில் ஒரு நாளாவது திருவண்ணாமலை சென்று, அண்ணாமலையாரின் அருளைப் பெற்று வாருங்கள்....!