யோகத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய தீமைகளை உணர்ந்து அவற்றை முன்கூட்டியே அகற்ற வழி தேடுபவன் விவேகி. அத்தீமைகள் மனதைக் கெடுத்து மோட்சம் பெறுவதற்குத் தேவையான ஆன்ம அறிவு எனும் ஞானம் வராமல் தடுத்துவிடும். அந்தத் தீமைகள் செயல்படும் விதங்களைக் குறித்து சிறு விளக்கங்கள்:
1. குரோதம் - இது பிறரைக் குறைகூறும் செயல். இது சண்டைச் சச்சரவுகளில் செயல்பட வைக்கும். மனதைக் கலங்கச் செய்யும். உடல் நடுக்கம், வியர்வை முதலியவற்றை உண்டு பண்ணும்.
2. ஹர்சம் - இது நம் விருப்பங்கள் நிறைவேறியதால் உண்டாகும் இன்ப நிலை. ஆனந்த பாஷ்பம் எனப்படும் இது கண்களிலிருந்து நீர் வழிதல் மற்றும் மயிர்க்கூச்சங்களை உண்டுபண்ணும்.
3. ரோசம் - இது விருப்பமில்லாத செயல்கள் மற்றும் அனுபவங்களால் உண்டாகும் மாறுபட்ட மனதைக் குறிக்கும்.
4. லோபம் / கஞ்சத்தனம் - இது பிறர் பொருளில் ஆசையை உண்டு பண்ணும். உயர்ந்த விஷயத்திற்குக் கூடத் தன் பொருளைக் கொடாதிருத்தல் என்பது போன்றவற்றைக் குறிக்கும்.
5. மோகம் - செய்யத் தகுந்த செயல்கள் எவை, செய்யத் தகாதவை எவை என்று அறியாத தன்மையைக் குறிக்கிறது. இது ஒரு வித மயக்க நிலையைக் குறிக்கும்.
6. தம்பம் - தர்மம் செய்வதிலும் தானே உயர்ந்த தர்மவான் என்று பலர் நடுவில் தன் தார்மீகத் தன்மையை வெளிப்படுத்துதல்.
7. த்ரோசம் -: பிறருக்கு விருப்பமற்றதைச் செய்து வருந்த வைத்தல்.
8. பொய் கூறல் - பயன் கருதியாயினும், பயனே இல்லாமலும் உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறுவது, செய்வது என்பன.
9. அதிகமாக உண்ணல் - பசிக்கு உணவு என்பது மாறி ருசிக்கு உணவு என்பது, கட்டுப்படாத ஆசையின் வெளிப்பாடு.
10. பிறரது குறையை மறைவில் கூறல் - எவரும் குற்றம் செய்திருப்பினும், தவறே புரிந்திருப்பினும், அவர் மனம் திருந்தி வாழ வழிவகுக்க உதவாத வகையில் அவரைப் பற்றி மற்றவர்களிடம் குறை கூறும் பழக்கம்.
11.அசூயை - பொறாமை என்ற இந்த மன நோய் பிறருக்கு ஏற்படும் நன்மைகளைக் கண்டு பொருமுதல், தவித்தல் முதலியன.
12. காமம் - உடல் இச்சை.
13. மன்யு - அவ்வகை நாட்டங்களில் தடைகள் ஏற்படும் போது உண்டாகும் தீவிரக் கோபம்.
14. அனாத்மியம் - மோட்சத்தைப் பெறுவதற்கான ஆத்ம விஷயங்களில் சிந்தனையின்றி இருத்தல்.
இவ்வகைத் தீமைகள் மனதைத் தன்வயப்படுத்தி மோட்சச் சுகம் தரும் யோகங்களைப் பெறவிடாமல் தடுத்து விடுகின்றன. அப்படிப்பட்ட உயர்ந்த யோகங்கள் எனப்படுவதைக் குறித்த சிறு விளக்கங்கள்:
1. ஸம்விபாகம் - விருந்தினருக்குத் தன் சக்திக்குத் தக்கபடி, உணவளித்து உபசரித்தல்.
2. தியாகம் - எல்லாவித வாய்ப்புகளும், வசதிகளும் இருக்கும் போதும் சுகம் தரும் பொருள்களிலிருந்து விலகியிருத்தல். இது சுவர்க்க லோகம், இந்திர லோகம் போன்ற உயர்ந்த சுகம் தரும் விஷயங்களிடத்திலும் மனதால் பற்று நீங்கிய நிலை.
3. ஆர்ஜவம் - கபடமற்ற எண்ணத்துடன் சொல்லால், மனதால், உடலால் செய்யப்படும் செயல்கள்.
4. மார்த்தவம் - எதிலும், எவரிடத்திலும் இளகிய மனத்தோடு கடுமை காட்டாது இருத்தல்.
5. தமம் - மனக் கட்டுப்பாடு. ஐந்து இந்திரியங்கள் வாயிலாக மனம் தன் போக்கில் செல்லவிடாது கட்டுப்படுத்துதல்.
6. சமம் - ஐவகை இந்திரியங்களும் தத்தம் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் செயல்படுவதைக் கவனத்தோடு நிறுத்தி வைத்தல்.
7. ஆர்யம் - அல்பத்தனம் இல்லாமை. தாராள மனப்பான்மையைப் போற்றுகிறது.
8. குரூரம் தவிர்த்தல் - பிறர் துன்பத்தில் மகிழும் தீய குணம் இல்லாமை.
9.துஷ்டி - தமக்குக் கிடைக்க வேண்டியது கிட்டாமல் போனாலும் கலங்காமல் தெளிந்த மனதோடு இருத்தல்.
இந்த உயர்ந்த குணங்களைப் பெற்றவர்கள் எல்லா விதத் தளைகளில் இருந்தும் விடுபட்டு, ஞானம் பெறுவதற்கான யோக்கியதையையும் பின்பு ஞானத்தையும் பெற்று வீடுபேறு பெறுவர்.