இராஜஸ்தானில் பிகானேர் மாவட்டத்தில் தேஷ்னோக் எனும் ஊரில் கர்ணிமாதா கோயில் என்ற பிரபலமான துர்க்கையம்மன் கோயில் இருக்கிறது.
இங்கு எலி புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆமாம், அதற்கும் ஒரு கதை இருக்கிறது.
ஒருமுறை கதாகலாட்சேபம் செய்யும் ஒரு பக்தரின் குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
துர்க்கையின் வடிவமான கர்ணிமாதா அக்குழந்தையை உயிர்ப்பிக்க எண்ணினார். அதற்கு முன் யமன் அதன் உயிரைப் பறித்துவிட்டான்.
அதனால் கர்ணிமாதா, ‘‘இனி சாரணர் குலத்தில் எவரையுமே யமன் பிடிக்கக் கூடாது. இறப்பவர்களின் ஆன்மாக்கள் சிறிது காலத்திற்கு எலிகளின் உடல்களில் வாழும்’’ என்று கூறி மீண்டும் அவர்கள் அதே இனத்தில் பிறக்கும்படிச் செய்தார்.
அன்று முதல் எலிகள் இங்கு புனிதமாகக் கருதப்படுகின்றன.
தேஷ்னோக் கோயிலில் எலிகள், பக்தர்களின் மடி மீதும் தோள்மீதும் பயமின்றி ஏறி அமர்கின்றன. அவற்றுக்குப் பிரசாதம் அளித்த பிறகே பக்தர்களுக்கு வழங்கப்படும். எலிகள் குடித்த நீரே தீர்த்தமாக வழங்கப்படும்.
இக்கோயிலின் எலிகளுக்கு யாராவது தீங்கிழைத்துவிட்டால் பரிகாரமாக வெள்ளியிலோ, தங்கத்திலோ எலி உருவம் செய்து அர்ப்பணிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது.
கோயிலிலிருந்து எலிகள் வெளியே வருவதில்லை. வெளி எலிகளும் உள்ளே செல்வதில்லை. இந்த எலிகள் எங்கே குட்டி போடுகின்றன? அவை எப்படி வளர்கின்றன? என்பதெல்லாம் யாருக்கும் புரியாத புதிர்கள் என்கின்றனர்.
பெரும்பாலான எலிகள் ஒரே அளவில் காணப்படுகின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.