சிவனுக்கு இரு மனைவி என்று சிலர் கூறுவர். சிவனுக்குப் பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால், கங்காதேவியைச் சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார்? என்று சிலர் கேள்வி எழுப்புவதுண்டு.
அன்றையக் காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது.
பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை எல்லாம் ஒரு வழி சொல்லும்படி கேட்டான்.
முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாய கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்து, அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையைப் பூமிக்கு அழைக்க, கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.
பகீரதனின் கடுந்தவத்தில் மனமிரங்கிய கங்காதேவி, அவன் முன் தோன்றினாள்.
“வேண்டும் வரம் கேள் பகீரதா”என்றாள்.
“தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கங்கையில் கரைக்க வேண்டும் என்பது விதி. ஆகாயக் கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியினரையும் உய்விக்க வேண்டும்” என்று சொன்னான் பகீரதன்.
”வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. என்னுடைய வேகத்தில், நான் இந்தப் பூமியை நோக்கி வந்தேன் என்றால், இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்துச் சிதறிவிடும். எனவே, என் வலிமையைத் தாங்கக் கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி, இந்தப் பூமிக்குத் தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும்தான் என் ஓட்ட வேகத்தைத் தாங்க முடியும்” என்று கூறி மறைந்தாள்.
பகீரதனும் சிவனை நோக்கித் தவம் செய்து, தன் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவபெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்கச் சொன்னார்.
சிவனின் திருமுடியை அடைந்த கங்கை, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். எனவேதான், சிவனின் திருமுடியில் கங்கா குடியிருக்கிறாள் என்கின்றனர்.