சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும். திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதால் பயனில்லை. இறைச்சந்நிதியில் நாம் செய்யப் போகும் கிரியையை விளக்கமாகக் கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதையும் கூறி, இதனை நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும்.
சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. பொருளுணர்ந்து இதனைக் கூறும் போது அதனைச் சுவைத்து இன்புறலாம்.
“மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய தேவஸ்ய… அஹம் அத்ய கரிஷ்யே”
என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காகவும் இன்றைய இந்த சுபநாளில், இன்ன தெய்வத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும்.
ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாக அமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால், ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி, கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.
பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்க்கலாம்.
“இறைவனின் கட்டலைப்படி, முதலாவது பிரம்மனின், இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது காலக் கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் தமிழ் வருடத்தில்), என்ற பெயரையுடைய வருடத்தில், அயனத்திலே, ருதுவிலே, மாதத்திலே, பட்சத்திலே, திதியிலே, நட்சத்திரத்திலே, கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபநாளிலே, நட்சத்திரத்தில் பிறந்த, பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும், இக்கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுகநலங்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும், இந்த இடத்திலுள்ள, இந்தப் பெயரையுடைய இறைவனின் கிரியையைக் குருமுகமா நான் செய்கிறேன்” என்று அமையும்.
சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும்.
ஒன்று “நான் இன்ன பலனை உத்தேசித்து, இந்தக் கிரியையைக் குரு மூலமாகச் செய்யப் போகிறேன்” என்று திடமாக உறுதி கொள்ளுதல்.
அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும்.
“இன்ன காலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப் பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.
இதே போல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. “எந்தச் சுவாமியின் சந்நிதியில்” எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும்.
இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒரு மணி நேரம் தேவை. ஆனால் அதன் சுருக்கத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும்.