அஹோபில க்ஷேத்திரத்தில் பகவான் நரசிம்மர் ஒன்பது வித வடிவங்களில் நவ நரசிம்மர்களாகக் காட்சி தருகிறார்.
1. ஜ்வாலா நரசிம்மர்
'எங்கிருக்கிறான் உன் நாராயணன்' என்ற ஹிரண்யகசிபுவின் அறை கூவலுக்குப் பதிலாக, பிரகலாதன், 'தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்!' என்றவுடன், கோபத்தின் உச்சியில் அவன் தன் கதையினால் தனது ஆயிரம் தூண்கள் கொண்ட அரண்மனையில் ஒரு தூணைத் தாக்க, அதே நொடியில் சிம்ம முகமும், மனித உடலும், வஜ்ர நகங்களும் கொண்டு தோன்றிய கோலம்.
2. அஹோபில நரசிம்மர்
கருடன் செய்த கடும் தவத்திற்கு மெச்சி, ஹிரண்யகசிபுவைத் தனது மடியில் போட்டு வதை செய்யும் கோலத்தில், சக்தி ஸ்வரூபனாக, மலைக் குகையில் நெருப்பின் உக்கிரத்தோடு சுயம்புவாகத் தோன்றிய மூர்த்தி.
3. மாலோல நரசிம்மர்
மா என்றால் திருமகள். லோலா என்றால் காதல். லக்ஷ்மி மேல் காதல் கொண்டவர். மகாலட்சுமித் தாயாருடன், லக்ஷ்மி நரசிம்மராகச் சேவை சாதிக்கும் பெருமாள். தாயாரும் பெருமாளின் இடத்தொடையில் ஆலிங்கனக் கோலத்தில் அமர்ந்து ஆனந்தமாகச் சேவை சாதிக்கிறார்.
4. க்ரோடா நரசிம்மர்
க்ரோடா என்றால் கோரைப்பல். கோர வராகமாகத் தோன்றி, ஹிரண்யகசிபுவின் சகோதரன் ஹிரண்யாக்ஷன் பாதாளத்தில் ஒளித்து வைத்த மண்மகளான தனது பிராட்டியாரைக் கோரைப் பற்களில் ஏந்தி வந்து அவருக்கு சரம சுலோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை சாதிக்கும் மூர்த்தி.
5. காரஞ்ச நரசிம்மர்
காரஞ்ச என்றால் தெலுங்கில் புங்க மரம் என்று பொருள். அனுமன் செய்த தவத்திற்கு மெச்சி ராமராகச் சேவை சாதிக்க, வனத்தில் சுயம்புவாகத் தோன்றியவர். 'விஷ்ணுவாக அல்ல ராமனாகவே தரிசிக்க விரும்புகிறேன்' என்று அனுமன் வேண்ட, வில், அம்பு தாங்கி நரசிம்மர் ராமனாகவும், ஆதிசேஷன் குடைபிடிக்க வைகுண்ட நாதனாகவும் சேவை சாதிக்கிறார்.
6. பார்கவ நரசிம்மர்
பார்கவர் என்ற முனிவர், திருமகள் தன் குழந்தையாக வரவேண்டும் என்று தவம் செய்து மகாலட்சுமியை மகளாகப் பெற்றவர். இவர் பெருமாளை நரசிம்மமூர்த்தியாகத் தரிசிக்க வேண்டுமென்று தவம் செய்ய, ஹிரண்யகசிபுவைத் தன் மடியில் வைத்து குடலை மாலையாகப் போடும் உக்ர நரசிம்மராக அருகில் கைகூப்பி பெருமாளின் கருணையை வியந்த வண்ணம் பிரகலாதன் நிற்க, சேவை சாதிக்கும் மூர்த்தி.
7. யோகானந்த நரசிம்மர்
பிரகலாதனுக்குக் குருவாக அமர்ந்து யோக நெறியைக் கற்பித்த நரசிம்மர். ஆதிசேஷன் மேல் கால்களை மடக்கி யோகக் கோலத்தில் யோக முத்திரையில் சேவை சாதிக்கும் பெருமாள்.
8. சத்ரவட நரசிம்மர்
சத்ரம் என்றால் குடை. வடம் என்றால் ஆலமரம். ஒரு பெரிய ஆலமரத்தினடியில் ஆனந்தமாக பத்மாசனத்தில் அமர்ந்து, ஹாஹா, ஹூஹூ என்னும் இரு கந்தர்வர்களின் இனிமையான சங்கீதத்தைச் செவிமடுத்தபடித் தாளம்போடும் கோலத்தில் சாந்த நரசிம்மராகச் சேவை சாதிக்கும் பெருமாள்.
9. பாவன நரசிம்மர்
நம்முடைய வினைகளைத் தீர்த்து இந்தப் பிறவிச் சுழலிலிருந்து நம்மைக் கரையேற்றி, இப்பிறவிப் பிணியிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவர். செஞ்சு எனும் பழங்குடியினர் இனத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு செஞ்சுலட்சுமித் தாயாருடன் காட்சி தரும் நரசிம்மர்.