இந்து சமய வழிபாட்டில் தேங்காய் பெரும்பங்கு வகிக்கிறது. தேங்காய் வழிபாட்டில் பல்வேறு தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன.
தேங்காய் நீர் என்பது உயிர் எனலாம். தேங்காயின் மட்டை , நார், ஓட்டுப் பகுதிகள் என்ற மூன்றும் மும்மலங்கள் ஆகும். இவை படிப்படியே களையப்பட்டவுடன், இறுதியில் அகங்கார ஓடும் நொறுங்க, அங்கே வெண்மைத் தூய்மை பிரகாசிக்கிறது. நீர் இறைவன் திருவுருவம் முன் அர்ப்பணிக்கப்படுகிறது என்று பொருள் கொள்ளப்படுகிறது.
தேங்காய் ஓடு அகங்காரம்; தேங்காய்ப் பருப்பு-ஞான உணர்வு. இறைவனது திருக்காட்சியை உயிர் பெறாதபடி இடையில் இரும்புத்திரை போன்று அகங்காரமே இருக்கிறது. அகங்கார 'ஓடு', உடைந்தால், உயிர், ஞான உணர்வைப் பெற்று இறைவனைத் தரிசிக்கிறது என்றொரு கருத்தும் சொல்லப்படுகிறது.
தேங்காய்-இதயம்; மூன்றாம் கண் ஞானக்கண்; வெண்மை -சத்துவக்குணம். ‘சத்துவக்குணத்துடன் சஞ்சலமில்லாமல், ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசிக்கும் போது தோன்றும் பக்தி, உணர்வுகளை இதயம் உணர்கிறது' என்ற உட்பொருளைத் தேங்காய் உணர்த்துகிறது என்று மற்றொரு கருத்தும் இருக்கிறது.
இதே போன்று, தேங்காய் உடைப்பதைப் பற்றியும் பல உட்கருத்துகள் இருக்கின்றன.
சிதறு தேங்காய்
கோயிலின் முன்பாக, குறிப்பாக பிள்ளையார் கோயிலின் முன்பாக, தேங்காய் சிதறித் தூளாகும்படி தரையில் அடிக்கும் சிதறு தேங்காய் போடும் நிகழ்வு நடைபெறுகிறது.
' சிதறிய தேங்காய்ப் பகுதிகளை, பலர் எடுத்துக் கொள்ளும்படி 'கொள்ளை' விடுவது சூறைத் தேங்காய். நான்கு திசைகளிலும் சிதறும்படி தேங்காயை உடைப்பது 'சதுர்த்தேங்காய்’ என்றும் சொல்வர்.
சிதறு தேங்காயைச் சூறை விட்டு, அர்ச்சனை செய்து வழிபடும் வழிபாடு விநாயகருக்கு மட்டுமே உரியது. இந்த வழிபாட்டு முறை தமிழகத்தில் மட்டுமே காணப்படுகிறது. விநாயகரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு சிலர் 108 எனும் எண்ணிக்கையில் தேங்காய்களைச் சூறை விடுவதுண்டு. சிதறிய தேங்காய்ச் சிதறல்களைத் தொகுத்து எடுக்கும் உரிமை சிறுவர்களுக்கே உரியது. சிறுவர்களில்லாத நிலையில், பெரியவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
இந்தச் சிதறு தேங்காயின் தத்துவப் பொருள் இதுதான். சிதறுகாய் அகங்காரத்தின் முடிவையும், தியாகத்தின் தொடக்கத்தையும் ஒருங்கே தெரிவிக்கிறது. சிறுவர்கள் சிதறல்களைத் தொகுப்பது, சூறைக்காயை உடைப்பவர், மறைமுகமாகச் செய்கின்ற தர்மமாகும். எனவே, அகங்கார மண்டையோடு உடைய வேண்டும்; அமுதமயமான அறிவுநீரை அடைய வேண்டும் என்பதுதான் சிதறு தேங்காய் சொல்லும் உட்கருத்துகளாகும்.
இதே போன்று, தேங்காயில் நெய்யை நிரப்பி, அதனால் வழிபடும் வழக்கமும் இருக்கிறது. இவ்வழிபாடு பெரும்பான்மையாக, ஐயப்பனுக்கே உரியது. ஐயப்பப் பக்தர்கள் கடும் விரதமிருந்து கட்டுகின்ற 'இருமுடியில்', முதல் முடியில் முக்கியமாக நெய்த்தேங்காய் இடம் பெறுகிறது. இதில் தேங்காயின் நீருக்குப் பதிலாக நெய் நிரப்பப்படுகிறது.
தேங்காய்-உடம்பு, நெய்-உயிர்; அல்லது பக்தி. நெய் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேங்காய் சபரிமலைத் திருக்கோயிலில், எப்போதும் எரியும் பெரிய ஓம குண்டத்தில் எறியப்படுகிறது. நெய் (உயிர்) இறைவனுடன் சங்கமமாகிறது; தேங்காய் (உடம்பு) எரியில் அடக்கமாகிறது.
மனிதனின் உயிர், உடம்போடு தோன்றுவதன் பயன், அது இறைவனுடன் ஒன்றுபடுவதுதான் என்ற அடிப்படைத் தத்துவத்தை நெய்த்தேங்காய் உணர்த்துகிறது.
கலசத்தேங்காய்
வரலட்சுமி விரதத்தின்போது கலசத்தின் மீது வைக்கப்படுவது, கலசத்தேங்காய். ஒரு கலசத்தில் நூல் வரிசைகளைச் சுற்றி, அதில் அரிசி அல்லது நீரால் நிரப்பி, ஐந்து மாவிலைகளை அமைத்து, கலசத்தின் மீது நாருடைய அல்லது நாரில்லாத தேங்காயைப் பொருத்துகின்றனர். தேங்காய்க்கு மஞ்சள் குங்குமமிட்டு, மலர்களாலும், நகைகளாலும், துணிகளாலும் மிகவும் தெய்விகக் கவர்ச்சி பொங்க அலங்கரிக்கிறார்கள். கலசத்தில் லட்சுமியின் முகத்தைப் பொருத்துகின்றனர்; அல்லது மஞ்சளால் முகத்தை உருவாக்குகின்றனர். இதற்கென்றே வெள்ளி, பொன்னாலான லட்சுமியின் முகம் உள்ளது.
வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன் மீது வைக்கப்படும் கலசம் மிகப் புனிதமானது, லட்சுமிகரமானது. ஆதிசங்கரர் கலசத்தேங்காயை 'ஞானபலம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கலசம் - மனம்; நூல் - பிரேமை, நீர், மகிழ்ச்சி , மாவிலை - இறைவனடி. 'மனமாகிய கும்பத்தின் மேல், இறைவனடி பொருந்தியிருக்க, தேங்காய் என்ற ஞானபலம் அதிகமாகிறது' என்பது இதன் கருத்து. அதாவது, கலசம் நல்ல தூய நீரால் நிறைந்திருப்பதைப் போல், மனம் நல்ல தூய எண்ணங்களால் நிறைந்திருக்க வேண்டும். கலசத்திலும், நீரிலிலும் மாவிலை இருப்பதைப் போல், மனதிலும், எண்ணங்களிலும் எப்போதும் இறைவனது திருவடிகளே நிலைத்திருக்க வேண்டும். அப்போது 'ஞானபலம்' பெருகி இறைக்காட்சி கிடைக்கிறது.
மற்றொரு கருத்தும் உள்ளது.
கலசம் - உடம்பு, நூல் நரம்புகள், நீர் - உயிர் அல்லது மனம்; மாவிலைகள் - தெய்வத்தின் அருளை உயிருக்கு மாற்றும் சாதனம்; தேங்காய் - தெய்வம்.
தெய்வமூர்த்தமாகவே கலசத் தேங்காயைக் கருதி, அதைச் சிறப்பாக அலங்கரிக்கிறார்கள். கலசத்தேங்காயின் உயர்ந்த மதிப்பு இங்குக் கருதத்தக்கது. அது தெய்வமாகவே கருதப்படுகிறது. வரலட்சுமி பூஜையில் மட்டுமல்லாமல், யாக சாலைகளில் விநாயகர், நவக்கிரகப் பூஜைகளிலும் கலசங்கள் பல பயன்படுகின்றன.
பூரண கும்பம் - கலசத்திற்கும், பூரண கும்பத்திற்கும் அதிக வேறுபாடு இல்லை. சிறிய செம்பைப் பயன்படுத்துவது கலசம், பெரிய செம்பு அல்லது குடத்தைப் பயன்படுத்துவது பூரண கும்பம். பூரண கும்பத்தில் வீற்றிருப்பவள் லட்சுமி; அதைக் கையில் ஏந்திக்கொண்டிருப்பவளும் அவளே. கோயில் முதலான இடங்களுக்கு வருகை தரும் சான்றோர் முதலியவர்களைப் பூரண கும்பத்துடன் வரவேற்பது வழக்கம். பூரண கும்பம் மங்கலத்தின் சின்னம்; அதன் விளிம்பில் பொருத்தப்படும் தேங்காய் இறைவன் திருமேனி. கும்பத்தில் ஆவாகனம் செய்யப்படும் இறைவனுக்குக் 'கும்பமூர்த்தி' என்பது பெயராகும்.
கும்பத்தேங்காய்
கும்ப தீர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, யாகம் நடத்தி, மந்திர உருவேற்றி, அந்தக் கும்ப தீர்த்தத்தை இறைவனின் மூர்த்தம் முதலியவற்றின் மேல் அபிஷேகம் செய்வதே கும்பாபிஷேகம்.
1. தானியம் - ஆசனம், 2. கும்பம் - இறைவனின் திருமேனி, 3. நூல் - நரம்புகள், 4. நீர் - இரத்தம், 5. அதனுள் போடப்படும் பொன் - உயிர், 6. தேங்காய் - திருமுடி.
கும்பத்தேங்காய் இறைவனின் திருமுடியாகத் திகழ்கிறது. அதாவது, கும்பமும், தேங்காயும் இணைவது இறைவனின் முழு வடிவமாகும்.
முகூர்த்தத் தேங்காய்
திருமண வீடுகளில், வரவேற்பு நுழைவாயிலில், குலையுடன் கூடிய வாழை மரத்தில், தேங்காய்க் குலையையும் கட்டுவது சந்தான அபிவிருத்தியின் அடையாளங்கள் மற்றும், செல்வ வளமையின் சான்றுகள்.
நாருடன் அமைந்த, எந்தக் குற்றமும் இல்லாத முகூர்த்தத் தேங்காய்க்கு மஞ்சள், குங்குமமிட்டு அதில் தாலியைச் சுற்றி வைக்கிறார்கள். தேங்காய் - ஒரு தெய்வம்; அதனுடன் தொடர்புடையது தாலி, சபையோருக்குத் தாலி காட்டப்படும் போது, அவர்கள் தேங்காயை வணங்குகிறார்கள், தாலியை வாழ்த்துகிறார்கள். ஆகவே, தேங்காய் ஒரு தெய்வம், அல்லது தெய்வத்திற்கு நிகரானது, வழிபடத் தகுந்தது.
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு முடிவில் அன்பளிப்பாகத் தரப்படுவதும் ஒரு தேங்காய்தான். இது நன்றியுணர்வை எடுத்துக் காட்டுகிறது.