இறைவனை வழிபடும் போது, சாதாரண ஏழையும் அர்ப்பணிக்கத் தகுந்த பொருள்களைத்தான் நமது முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தார்கள்.
அதாவது பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்பவை அவை.
'பத்ரம்' என்பது வில்வ இலையையும், துளசி இலையையும், அருகம் புல்லையும் குறிக்கும். இவற்றை அர்ப்பணிப்பவன் அவற்றை மரம், செடிகளிலிருந்து தனது கையாலேயே பறிக்க வேண்டும். பிறர் பறித்து வாங்கக் கூடாது.
'புஷ்பம்' என்பது பலவித மலர்களைக் குறிக்கும். பிறர் பறித்து அவற்றை வாங்கலாம். ஆனால் அவற்றை விலை கொடுத்து வாங்கக் கூடாது.
'பலம்' என்பது பலவித பழங்களைக் குறிக்கும். அவற்றைப் பிறரிடம் காசு கொடுத்து விலைக்கு வாங்கலாம்.
'தோயம்' என்பது தண்ணீரைக் குறிக்கும். இவற்றை குளம், ஆறு, கிணறு இவற்றிலிருந்து, தானே இறைத்து எடுக்க வேண்டும்.
இவை நான்குமே கிடைக்காமல் போகக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும் போது, நாம் என்ன செய்வது? அப்போது நமக்கு நாமே தண்ணீரை உண்டு பண்ணி, இறைவனுக்கு அர்ப்பணிக்கும்படி இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார். அதற்கு ஒரு தனிச்சிறப்பும் உண்டு.
எப்படி?
முதலில் கூறிய நான்கு பொருட்களும் கிடைக்காததால், முறையாகத் தங்களால் இறைவனுக்கு அர்ப்பணிக்க முடியவில்லையே என்று வருந்தி இறைவனை நினைத்துவிடும் கண்ணீர்தான் நாமே உண்டு பண்ணும் தண்ணீர். இதில் இறைவன் நிச்சயமாகத் திருப்தி அடைகிறார்.