தமிழர் வழிபாட்டு மரபுகளில் நெய் விளக்கு அல்லது நெய் தீபம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஒரு புனிதமான தீப வழிபாடாக இருக்கிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பின் வடிவமாகவும், அறியாமை என்னும் இருளை நீக்கி ஞானம் என்னும் ஒளியைத் தரும் குறியீடாகவும் இத்தீபம் போற்றப்படுகிறது.
இறை வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும் எரிபொருட்களில் பசு நெய் மிகவும் தூய்மையானதாகவும், சாத்வீகத் தன்மை கொண்டதாகவும் கருதப்படுகிறது. நெய் விளக்கு எரியும்போது வெளிப்படும் புகையானது, காற்றில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை அழித்து, தெய்வீக ஆற்றலை (சக்தி அலைகளை) ஈர்க்கும் காந்தப்புலத்தை உருவாக்குகிறது என்கிற நம்பிக்கை இருக்கிறது.
நெய் விளக்கேற்றப் பயன்படுத்தப்படும் திரிகளின் அடிப்படையில் வெவ்வேறு பலன்கள் கைூடும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்;
* பஞ்சுத் திரி நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதால், பொதுவான நல்வாழ்வு மற்றும் குடும்ப அமைதி உண்டாகும்.
* தாமரைத் தண்டுத் திரி நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதால், முன்வினைப் பாவங்கள் நீங்கும். மகாலட்சுமியின் அருள் பெற்றுச் செல்வ வளம் பெருகும்.
* வாழை நார்த் திரி நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதால், குடும்பத்தில் உள்ள பித்ரு சாபங்கள் மற்றும் குலதெய்வக் குற்றங்கள் நீங்கி, குழந்தை பாக்கியம் கிட்டும்.
மகாலட்சுமி, சிவபெருமான், துர்க்கை ஆகியோருக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.
* வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரையில் அல்லது மாலை பிரதோச நேரத்தில் வீட்டின் பூசை அறையிலும், நிலை வாசலிலும் நெய் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் வறுமை நீங்கிச் செல்வம் பெருகும் என்பது தொன்ம நம்பிக்கை.
* பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் நெய் தீபமேற்றுவது சிவபெருமானின் பேரருளைப் பெற்றுத் தரும்.
* செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை அல்லது நெய் தீபமேற்றுவது திருமணத் தடைகளை நீக்கும்.
இதே போன்று, கோயில்களிலோ அல்லது வீடுகளிலோ ஏற்றப்படும் நெய் விளக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழிபடுபவர்களுக்குக் கிடைக்கும் ஆன்மீகப் பலன்கள் மாறுபடுவதாகவும் சொல்கின்றனர்.
* 1 தீபம் - மன அமைதி கிட்டும்.
* 3 தீபங்கள் - கல்வி அறிவு உண்டாகும்.
* 9 தீபங்கள் - நவக்கிரகத் தோசங்கள் நீங்கும்.
* 12 தீபங்கள் - ஜென்மராசி தோசங்கள் நிவர்த்தியாகும்.
* 18 தீபங்கள் - திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் கைகூடும்.
* 27 தீபங்கள் - நட்சத்திர தோசங்களின் செயல்பாடுகள் குறையும்.
* 48 தீபங்கள் - நீண்ட நாள் தீராத நோய்கள் தீரும்.
* 108 தீபங்கள் - நினைத்த காரியங்கள் அனைத்தும் கைூடும்.
* 504 தீபங்கள் - கடுமையான கடன் தொல்லைகள் தீரும்.
* 1008 தீபங்கள் - சந்தான பாக்கியம் (குழந்தைப் பேறு) கிடைக்கும்.