தற்போதைய சோதிடப் பரிகாரங்களின் மூலம் மக்களிடையே சில பரிகார விளக்குகள் பிரபலமடைந்துள்ளன. இவ்விளக்கு ஏற்றப்படுவதன் வழியாக, மன அமைதி, எதிர்மறை ஆற்றல் நீக்கம் மற்றும் உடனடித் தீர்வு போன்றவை கிடைக்கும் என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.
1. வெற்றிலை விளக்கு
இந்து சமயத்தில் வெற்றிலை என்பது மங்களகரமான பொருளாகவும், மகாலட்சுமியின் இருப்பிடமாகவும் கருதப்படுகிறது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முழுமையான, காம்புகளுடன் கூடிய பச்சையான வெற்றிலைகளை நட்சத்திர வடிவத்திலோ அல்லது வட்ட வடிவத்திலோ அடுக்கிக் கொள்கின்றனர். அதன் மையப்பகுதியில் ஒரு சிறிய களிமண் அகல் விளக்கை வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றித் தீபமேற்றப்படுகிறது. கடன்களால் ஏற்படும் மன உளைச்சல்கள் நீங்கவும், கணவன் - மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவவும், சுபகாரியத் தடைகள் அகலவும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இத்தீபம் ஏற்றப்படுகிறது.
2. பசுஞ்சான விளக்கு
பசுவின் சாணத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாகப் பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. தூய்மையான நாட்டுப் பசுவின் சாணத்தைச் சேகரித்து, அதனை உலர வைத்து, களிமண் அகல் விளக்கு போன்ற வடிவத்தில் கைகளால் செய்து, அந்தச் சாணக் கிண்ணத்தின் உள்ளேயே எண்ணெய் மற்றும் திரி இட்டு நேரடியாக ஏற்றப்படும் விளக்கு வடிவமாகும். இவ்விளக்கு எரியும் போது அதன் நெய் தீர்ந்தவுடன், சாணக் கிண்ணமும் சேர்ந்து முழுமையாக எரியத் தொடங்கும். இது எரியும்போது வெளிப்படும் புகை, காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். வீட்டில் உள்ள தரித்திரம், கண்புருவம் மற்றும் தீய சக்திகள் விலகி லட்சுமி கடாட்சம் உண்டாக இது பயன்படுகிறது.
3. பஞ்சகவ்ய விளக்கு
பசுவிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம் மற்றும் பசுஞ்சாணம் ஆகிய ஐந்து புனிதப் பொருட்களை (பஞ்சகவ்யம்) சில மூலிகைகளுடன் கலந்து விளக்குக் கிண்ணமாக வார்த்தெடுக்கப்படுகிறது. இந்த விளக்கை அரச இலை, வாழையிலை அல்லது வெற்றிலையின் மீது வைத்து, அதன் உள்ளே பசு நெய் ஊற்றித் தீபமேற்ற வேண்டும். விளக்கு எரிந்து முடிந்த பின் எஞ்சும் சாம்பலைத் தூய்மையான "விபூதி" பிரசாதமாகவும், செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்துகின்றனர். பஞ்சகவ்ய விளக்கு எரியும் போது வெளிப்படும் மூலிகைப் புகை, வீட்டில் கணபதி ஹோமம் அல்லது நவகிரக ஹோமம் நடத்தியதற்கு நிகரான நேர்மறை அதிர்வுகளை உருவாக்கி, கடுமையான வாஸ்து தோஷங்களை நீக்கும் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.
4. மிளகு விளக்கு
ஒரு சிறிய சிவப்பு நிறப் பருத்தித் துணியில் சில கருப்பு மிளகுகளை இட்டு முடிச்சாகக் கட்டி, அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு முடிச்சைத் திரியாகப் பயன்படுத்தித் தீபமேற்றப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி திதி நாட்களில் மாலை நேரத்தில் காலபைரவர் சன்னதியில் இது ஏற்றப்படுகிறது. இழந்த சொத்துக்கள் மற்றும் பணத்தை மீண்டும் பெறவும், நீதிமன்ற வழக்குகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் இத்தீபம் ஏற்றி வழிபடப்படுகிறது.
5. குபேர விளக்கு
ஒரு சிறிய ஆழமான வட்டக் கிண்ண வடிவில் உள்ளது. சில விளக்குகளில் அதன் பின் பலகையில் செல்வத்தின் அதிபதியான குபேரனின் திருவுருவமோ அல்லது "குபேர முத்திரை" மற்றும் குபேர நாணயங்களின் வடிவங்களோ செதுக்கப்பட்டிருக்கும். பொதுவாக, வியாழக்கிழமை மற்றும் தீபாவளி, தனத் திரியோதசி போன்ற நாட்களில் வீட்டின் பூசை அறையின் வடக்குத் திசையில் அல்லது பணப்பெட்டியின் அருகில் ஏற்றப்படுகிறது. பூச நட்சத்திரம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாட்கள், தேய்பிறை பிரதமை திதி மற்றும் வியாழக்கிழமையுடன் பூச நட்சத்திரம் இணைந்து வரும் நாட்கள் குபேர தீப வழிபாட்டிற்கு மிக விசேஷமான நாட்களாகும். இவ்விளக்கு ஏற்றி வழிபடுவது, வறுமை நீங்கித் தொழில் வளம் சிறக்கவும், வீட்டில் எப்போதும் செல்வமும் பணப்புழக்கமும் தடையின்றி நிலைத்திருக்கவும் நவீனப் பரிகாரமாக இருக்கிறது.
6. கோபுர வடிவ விளக்கு
இந்து சமயக் கோயில்களின் பிரதான நுழைவாயில் கோபுரத்தை அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் வகையில் மிக நுட்பமான அடுக்குக் கட்டிடக் கலை வடிவில் பித்தளையால் செய்யப்படுகிறது. கோபுரத்தின் அடியில் விளக்குக் கிண்ணங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களுக்கு அடிக்கடி செல்ல முடியாத தற்கால நகரத்து மக்கள், தங்களின் வீட்டின் பூசை அறையிலேயே கோயில் கோபுர தரிசனம் செய்த பலனைப் பெற இவ்வடிவ விளக்கை ஏற்றி வழிபடுகின்றனர்.
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த விளக்கை வீட்டில் ஏற்றுவதன் மூலம் ஒட்டுமொத்தக் கோயிலையே வீட்டிற்குள் எழுந்தருளச் செய்வதற்குச் சமமான நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என்பது தற்போதைய நம்பிக்கையாக இருக்கிறது.
7. வராகி விளக்கு
சப்தகன்னியரில் ஒருவரான, பன்றி முகத்தைக் கொண்ட மிகச் சக்தி வாய்ந்த பெண் தெய்வமான வாராஹி அம்மனின் முழு உருவச் சிலையையும், அதன் அடியில் விளக்கேற்றும் கிண்ணத்தையும் ஒரே அமைப்பாக இணைத்து வார்த்தெடுக்கப்படும் நவீன வடிவ விளக்காகும். பஞ்சமி திதி நாட்கள், வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் இரவு நேரங்களிலோ அல்லது ராகு காலத்திலோ இந்த விளக்கில் நெய் அல்லது இலுப்பெண்ணெய் ஊற்றி ஏற்றி வழிபடுகின்றனர்.
தன்னை நம்பிய பக்தர்களைக் காக்கும் வெற்றித் தேவதையான வராகிக்கு இவ்விளக்கை ஏற்றுவதன் மூலம் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். கண் திருஷ்டி மற்றும் செய்வினைக் கோளாறுகள் அழியும் என்பது தற்போதைய நம்பிக்கையாக இருக்கிறது.
8. காமதேனு விளக்கு
பாற்கடலில் தோன்றிய, நினைத்த யாவற்றையும் தரும் மங்களகரமான கற்பகப் பசுவான காமதேனுவின் வடிவத்தைக் கொண்டிருக்கும். பசுவின் உடம்பில் சகல தேவர்களும் உறைவது போன்ற செதுக்கல்களுடன், அதன் முன்பகுதியில் விளக்கேற்றும் அமைப்பு இருக்கும். புதியதாக வீடு குடியேறும் போது அல்லது வெள்ளிக்கிழமைகளில் இவ்வடிவ விளக்கை ஏற்றுவது குடும்பத்தில் உள்ள தரித்திரங்களை நீக்கி, சகல நன்மைகளையும் தரும் என்பது தற்போதைய நம்பிக்கையாக இருக்கிறது.
9. மயில் / அன்னப்பறவை அடுக்கு விளக்குகள்
பாரம்பரியக் குத்துவிளக்கின் நவீனப் பரிணாமமாக, ஐந்து அல்லது ஏழு அடுக்குகளைக் கொண்ட தட்டுகளுடன், அதன் உச்சியில் மயில் அல்லது அன்னப்பறவையின் வடிவம் பிரம்மாண்டமாகப் பொருத்தப்பட்டிருக்கும். தற்காலத்தில் பெரிய ஆன்மீகச் சொற்பொழிவுகள், திருமண விழாக்கள் மற்றும் நவீனப் பொதுக் கூட்டங்களின் தொடக்க விழாக்களில் மங்கள விளக்காக இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
(தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆகம நூல்களிலோ அல்லது பழங்கால நாட்டார் சடங்கு முறைகளிலோ பரிகார விளக்குகள் என்பவை குறிப்பிடப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது)