தமிழ்நாட்டின் கொங்கு நாடு எனப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள சில கிராமங்களில், விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்கள் முதன் முதலில் பாளை விடும் நிகழ்வை, மனிதச் சடங்கு விழாவினைப் போலக் கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. இந்த வினோதமான மரபு வழிச் சடங்கினை பாளை பூசை என்கின்றனர். ஒரு தோப்பில் அல்லது வீட்டுத் திடலில் எத்தனை மரங்கள் இருந்தாலும், அங்குள்ள முதன்மைத் தென்னையின் 'முதல் பாளைக்கு' மட்டுமே இந்தச் சிறப்பு மரியாதைகள் செய்யப்படுகின்றன. இது முதல் பாளை தென்னை வழிபாடு எனவும் அழைக்கப்படுகிறது. தென்னை பூப்பெய்தும் சடங்கு எனவும் அறியப்படுகிறது.
தென்னையில் பாளை வெளிவந்து வெடிப்பதற்கு முன்பாக நல்ல நாள் பார்க்கப்படுகிறது. பாளை விட்ட தென்னை மரத்தை நீராட்டி, அதற்குப் புதிய வேட்டி அல்லது புடவை உடுத்தப்படுகிறது. மஞ்சள் அரைத்து மரத்தில் காது, மூக்கு, கண் போன்ற மனித முக உருவங்கள் உருவாக்கப்பட்டு, அதற்குப் பொட்டு மற்றும் வளையல், மலர்களிட்டுச் சிப்பங்கள் அல்லது நகைகள் அணிவிக்கப்படுகின்றன. பெண் குழந்தைகள் பூப்படையும் போது, சடங்குச் சோறாகப் 'புட்டு' அவிப்பது போல, இச்சடங்கிலும் தென்னை மரத்திற்குப் புட்டுச் சுற்றி மங்கள அர்ச்சனை செய்து பூசை செய்யப்படுகிறது.
பூசை வழிபாடுகள் நிறைவடைந்தவுடன், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து விசேசக் கறிவிருந்து பரிமாறப்படுகிறது. இந்த வினோதப் பாளை பூசைக்கு வரும் உறவினர்கள், வீட்டு விசேஷங்களுக்குச் செய்வதைப் போலத் தோப்பக்காரர்களுக்கு மங்களப் பொருட்களோடு மொய் எழுதும் வழக்கமும் சில கிராமங்களில் நிலவுகிறது.