கர்மங்கள் அல்லது செயல்கள் என்பது 1. காம்ய கர்மம் (பயனை விரும்பும் செயல்கள்), 2. நிசித்த கர்மம் (தவிர்க்க வேண்டிய செயல்கள்), 3. நித்திய கர்மம், (அன்றாடம் கட்டாயமாக செய்ய வேண்டிய கடமைகள்) மற்றும் 4. நைமித்திக கர்மம் (செய்ய வேண்டிய சமயச் சடங்குகள்), 5. பிராயசித்த கர்மம் (செய்த பாவத்தை நீக்கும் பொருட்டு செய்யப்படும் கர்மங்கள்) என ஐந்து வகையான கர்மங்களை இந்து சமய வேதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்கள் வகைப்படுத்தியுள்ளது.
1. காம்ய கர்மம்
காம்ய கர்மம் என்பது வேதத்தில் கூறியபடி, ஒரு மனிதன், தான் விரும்பும் பயன் கருதி செய்யும் செயலே காம்ய கர்மம் என்பர். எடுத்துக்காட்டாக, செல்வம், குழுந்தைகள், பதவி, பட்டம், புகழ், இன்பம், மழை, சொர்க்கம் மற்றும் விரும்பிய மற்ற வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு செய்யும் வேள்விகள், யக்ஞம், பூசைகள், மற்றும் விரதங்கள போன்றவை காம்ய கர்மம் ஆகும்.
2. நிசித்த கர்மம்
வேத வேதாந்த சாத்திரங்களில் ஒரு மனிதன் செய்யக்கூடாத, தவிர்க்க வேண்டிய செயல்களை நிசித்த கர்மம் என்பர். எடுத்துகாட்டாக, மது பானம் குடித்தல், விபச்சாரம் செய்தல், பொய் கூறுதல், திருடுதல், பிறர்க்கு சொல், செயல் மற்றும் உடல் மூலம் துயரமடையச் செய்தல் போன்றவை நிசித்த கர்மம் ஆகும்.
3. நித்திய கர்மம்
ஒரு மனிதன் நாள்தோறும், வேத வேதாந்த சாத்திரங்களில் கூறப்பட்ட செயல்களை (கருமங்களை) செய்வது நித்திய கர்மம் என்பர். எடுத்துக்காட்டாக, அதிகாலை, நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் காயத்ரி மந்திரம் கூறி சந்தியா வந்தனம் செய்தல், அக்கினி ஹோத்திரம் எனும் சிறு வேள்வி செய்தல் மற்றும் பஞ்சமகாயக்ஞம் செய்தல் போன்றவை நித்திய கர்மம் ஆகும்.
4. நைமித்திக கர்மம்
ஒரு நோக்கத்துடன் கூடிய அல்லது காரணத்துடன் கூடிய செயலே நைமித்திக கர்மம் ஆகும். ஏதாவது ஒரு தனிப்பட்ட நோக்கம் அல்லது காரணத்தினால் செய்யத்தக்க கர்மம் நைமித்திக கர்மம் ஆகும். எடுத்துக்காட்டாக, வேதத்தில் கூறியவாறு குழந்தை பிறந்தவுடன் செய்ய ஜாதேஷ்டி யாகம் அல்லது ஜாதகர்மா மற்றும் உபநயனம் போன்ற கர்மங்கள் நைமித்திக கர்மங்கள் ஆகும். மேலும் அமாவாசை, பௌர்ணமிகளில் செய்ய வேண்டிய தர்சபூர்ணமாச யாகங்கள், சிரார்த்தம் போன்றவை நைமித்திக கர்மங்களின் வகைகள் ஆகும்.
5. பிராயசித்த கர்மம்
ஒரு மனிதன் தான் செய்த பாவத்தை நீக்கிக் கொள்வதற்கு அல்லது குறைத்துக் கொள்வதற்கு உறுதுணையாக உள்ள சாந்திராயணம் போன்ற யாகங்கள் செய்வதற்குப் பிராயசித்த கர்ம்ம் என்பர். முற்பிறவியில் செய்த தீய செயலின் பலன்தான் பாவம் ஆகும். இப்பாவத்தின் விளைவுதான் துயரம், வேதனைகளை ஏற்படுத்துகிறது. பாவம் செய்தவன் அதன் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் எனில், வேதாந்த சாத்திரங்கள் வகுத்துள்ள பாவத்தை நீக்கும் பிராயச் சித்தக் கர்மங்களை செய்ய வேண்டும். `பிராய` எனில் தவம் ஆகும். `சித்தம்` எனில் நிச்சயம் அல்லது உறுதி ஆகும். பாவத்தை அகற்றுவதற்காகச் செய்யும் தவத்தின் உறுதியால் இதைப் பிராயச்சித்தம் என்று ஆங்கீரச ஸ்மிருதி விவரிக்கிறது.
தரும சாத்திர நூல்களில் பலவிதமான பாவங்களும் அதற்குரிய பிராயச்சித்தங்களும் விவரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, அகமர்ஷணம், அதிக்ருச்சரம், அர்த்தக்கிருச்சரம், கோவிரதம், சந்திராயணம் எனும் விரதங்கள், பிராயச்சித்த கர்மங்கள் எனப்படுகின்றன. சந்திராயண விரதம் எனும் பிராயசித்த கர்மம் என்பது சந்திரனின் வளர்பிறை, தேய்பிறைக் கலைகள் போன்று, பிராயசித்த கர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவன், தான் உண்ணும் உணவைப் பௌர்ணமியிலிருந்து சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டு, அமாவாசை நாளன்று முழு உண்ணாவிரதம் கடைப்பிடித்து, பிறகு அடுத்த நாள் முதல் பௌர்ணமி நாள் வரை உண்ணும் உணவை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதாகும்.