பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதி அன்று விரதம் இருந்து சிவபெருமானின் அம்சமான ஸ்ரீ பைரவர் சன்னதியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் என்பது இந்து சமய மக்களின் நம்பிக்கையாகும். தொடர்ந்து எட்டு அஷ்டமியில் பைரவரை விரதம் இருந்து வழிபட்டு வந்தால், இழந்த பொருட்களை மீண்டும் பெறலாம். அடகு வைத்த நகைகளைத் திருப்பும் வாய்ப்பும் கிட்டும். தேனும், பாலும் கலந்து பைரவருக்கு அபிஷேகம் செய்தால் எதிர்ப்புகள் அகலும். செவ்வாய்க் கிழமை தீபமேற்றி வழிபட்டால் வராத கடன்கள் கூட வசூலாகும். வாழ்க்கை வளமாகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் பைரவருக்கான மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.
பைரவரை கீழ்க்கண்ட மாதங்களில் அஷ்டமி விரதம் இருந்து வழிபட்டால் கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும் என்கின்றனர்.
1. சித்திரை - மனக்குழப்பம் தீரும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படும்.
2. வைகாசி - கடன் சுமை தீரும்.
3. ஆனி - கல்வியில் மேன்மை அடையலாம்.
4. ஆடி - லட்சுமி கடாட்சம் பெருகும்.
5. ஆவணி - நவகிரகதோஷம் விலகும்.
6. புரட்டாசி - ஆயுள் விருத்தி உண்டாகும். பித்ரு தோஷம் விலகும்.
7. ஐப்பசி - சகோதர பகை நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
8. கார்த்திகை - தனவரவு ஏற்பட்டு செல்வம் பெருகும்.
9. மார்கழி - தொழில் விருத்தி அடையும்.
10. தை - மனபயம் விலகும், உயர் பதவி கிடைக்கும்.
11. மாசி - போட்டிகளில் வெற்றி பெறலாம்.
12. பங்குனி - திருமணத்தடை உள்ளிட்ட தடைகள் யாவும் விலகும்.