உலகின் பிராண சக்திக்கு மூலஸ்தானம் சூரியன். அதன் ஒளி மூலம் கிடைக்கும் பிராண சக்தியை மரம், செடி, கொடி முதலிய தாவரங்கள் சேமித்துக் கொண்டு, நமக்கு உணவாகி நம்மிடம் சேர்க்கின்றன.
சூரியனின் பிராணசக்தி ஓஷம் எனப்படும். அதனைச் சேமித்து வைத்துக் கொள்வதால் தாவர இனத்தை ஓஷதி என்பர்.
இந்தப் பிராண சக்தியைச் சூரியனிடமிருந்து பிரித்து ஓஷதிகளில் புகுத்தி சக்தி மிக்கவையாகச் செய்பவன் சந்திரன். அதனால் அவனுக்கு ஓஷதீசன் என்ற பெயருண்டு.
இப்படிப் பிராண சக்தியை அதிக அளவில் தாங்கி நிற்பதால் தாவரங்கள் சக்திமிக்க உணவாகின்றன. தாவரங்களை உண்டு வளரும் ஆடு முதலியவை தாவர உணவிற்கு அடுத்தபடியாக உணவாகின்றன.
அந்த ஆடு முதலியவற்றை உணவாகக் கொள்ளும் விலங்கினங்கள் உணவுத் தன்மையில் மிகத் தாழ்ந்தவை.
கதிரவனிடமிருந்து பிரிந்த பிராண சக்தி காற்றில் கலந்து நம் மூச்சு வழியே உட்சென்று பரிணாமங்கள் சரியே நடக்க உதவுகின்றது.
இதனால் கிடைக்கும் தாபம் தேவையான அளவிற்குட்பட்டு இதமாகப் பயன்படுவதைச் சந்திரனிடமிருந்து பிரதிபலிக்கும் சூரிய கிரணங்கள் கண்காணிக்கின்றன.
அக்னி - ஸோமம் என்று தரிசனங்கள் கூறும் சூரிய சந்திர சக்திகள் தாவர உணவின் மூலமும் தாவர உணவை உண்டு வாழும் பிராணிகளாலான உணவின் மூலமும் நம்மைத் தாங்குகின்றன.