ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளன்று ஆடிப்பூரம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும் சக்தியான உமாதேவி தோற்றம் பெற்றார் என்று கருதப்படுகிறது.
இந்த நாளில் அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணமும், நீண்ட காலமாகக் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறும் கிடைக்கும் என்பது தொன்ம நம்பிக்கையாகும்.
இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்து பக்தர்கள் வழிபடும் வழக்கம் உள்ளது. சில கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்புத் திருவிழாவும் ஆடிப்பூரத்தன்று நடத்தப்படுகிறது.
இந்து சமயத்தின் சாக்த (சக்தி) வழிபாட்டு முறையில் அம்மன் ஆலயங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கியத் திருவிழாவாக, ஆடிப்பூர வளைகாப்பு விழா இருந்து வருகிறது. தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தன்று அகில உலகையும் படைத்துக் காக்கும் ஜெகன்மாதாவான அம்பிகைக்கு, மனித வளைகாப்புச் சடங்கைப் போன்றே லட்சக்கணக்கான கண்ணாடி வளையல்களைக் கொண்டு வளைகாப்புத் திருவிழா நடத்தப்படுகிறது.
உலக உயிர்கள் அனைத்தையும் தன் குழந்தைகளாகக் கருதிச் சுமக்கும் பூமித்தாயான அம்மனுக்கு, அண்ட சராசரங்களையும் தாங்குவதால் ஏற்படும் களைப்பைப் போக்கி மகிழ்விக்க பக்தர்கள் செய்யும் உன்னத வழிபாடாக, இந்த வளைகாப்பு விழா இருக்கிறது. ஆடிப்பூரத்தன்று விடியற்காலையிலேயே அம்மனுக்குப் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து, பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பல வண்ணக் கண்ணாடி வளையல்களைக் கொண்டு அம்மனின் கருவறை, விக்ரகம் மற்றும் பிரகாரம் முழுவதும் அலங்கரிக்கப்படும். விழா நிறைவடைந்ததும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்கள், பெண் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
நீண்ட நாட்களாகக் குழந்தைப்பேறு இல்லாத திருமணமான பெண்கள், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி, அங்குத் தரப்படும் பிரசாத வளையல்களை அணிந்து கொண்டால் விரைவில் மழலைச் செல்வம் கிட்டும் என்பது தொன்ம நம்பிக்கையாகும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த பிரசாத வளையல்களை அணிந்து கொள்வதன் மூலம் சுகப்பிரசவம் நிகழும் என்றும், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. கன்னிப் பெண்கள் இந்த வளையல்களை அணிந்தால் விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் கூடிவரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலிலுள்ள அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று லட்சக்கணக்கான வளையல்களால் வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூரத்தன்று லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கஞ்சிக்கலயம் ஏந்தி வந்து அம்மனுக்குக் கஞ்சி வார்த்து வழிபடும் ஆடிப்பூர விழா நடைபெறுகிறது. இதே போன்று பல அம்மன் கோயில்களில் ஆடிப்பூரத் திருவிழா மிகச் சிறப்பாக நடத்தப்பெறுகிறது.
சைவ சமயக் கோயில்கள் மட்டுமின்றி, ஆடிப்பூரம் நாள் வைணவக் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமாலின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாகத் தோன்றிய வேளையில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாகத் தோற்றம் பெற்றார் என்கின்றனர். எனவே, ஆடிப்பூர நாளில் பெண்கள் ஆண்டாள் வழிபாடு செய்து பயன்பெறலாம்