தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் நாளன்று, தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை ஆடிப்பெருக்கு எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இதனை, பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் சொல்கின்றனர். கொங்குத் தமிழ்ப் பேச்சு வழக்கில், ஆடி நோம்பி என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டும், கிழமைகளையும் கொண்டும் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18 ஆவது நாள் என்று நாளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுதான்.
தென்மேற்குப் பருவத்தில் ஆற்றின் நீர்ப்பிடிப்பு இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனை ‘ஆற்றுப்பெருக்கு’ எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத் நதிகளைத் தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவர். இதனை அடிப்படையாகக் கொண்டு, ‘ஆடிப்பட்டம் தேடி விதை; என்ற பழமொழியும் விளைந்தது.
பொதுவாக, ஆடிப் பதினெட்டாம் நாளில் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிப்படவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து, ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தைச் சுத்தம் செய்து, பசுவின் சாணத்தால் மெழுகி, அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு உதவும் தண்ணீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். அது மட்டும் அல்லாமல், தங்கள் வீட்டில் தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என்று பல விதமான கலப்புச் சாதங்கள் செய்து, அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்துக் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவைச் சாப்பிட்டு மகிழ்கின்றனர்.
ஆடிப் பதினெட்டாம் நாளில், திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, முக்கொம்பு படித்துறை மற்றும் மேலும் அங்குள்ள 3 படித்துறைகளில், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாகத் திருமணமான பெண்கள், திருமணமாகாதக் கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காகக் காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்துப் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியன தயார் செய்து, படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.